பொன்னமராவதி வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவ சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது பெய்துள்ள கோடைமழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகப்படுத்தலாம். களைகளின் வேர்களையும், விதைகளையும் அழிப்பதன் மூலம் பயிரிடும்போது களைகளால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்கலாம்.
நடப்பு காரீப் பருவத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக உயர்ந்த ரக நிலக்கடலை விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ஆடுதுறை 45 ரக சான்று பெற்ற நெல் விதைகள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. வேளாண் கருவிகளை பொருத்தவரை நிலத்தை உழுது சமன்படுத்தும் ரொட்டவேட்டர் கருவி மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பயறு விளைச்சலை அதிகப்படுத்தும் சான்று பெற்ற உளுந்து, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
நடப்பு பருவத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விளைச்சலை அதிகரிக்க இடை உழவு செய்து உயிர் உரங்கள், ரசாயண உரங்கள், மற்றும் நுண்சத்து உரங்கள் இடவேண்டியது அவசியமாகும். மேலும், தக்கைப்பூண்டு, சணப்பு போன்ற விதைகளை அடர்த்தியாக விதைத்து மடக்கி உழுவதன் மூலம் தென்னை மகசூலை அதிகரிக்கலாம்.
தக்கைபூண்டு விதைகள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. மேலும், அறுவடை செய்யும் வேளாண் பொருள்களை நல்லமுறையில் காயவைத்து சுத்தம் செய்ய தேவையான தார்ப்பாய்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
எனவே, பொன்னமராவதி வட்டார விவசாயிகள் தங்களுக்குத் தேவையான அனைத்து வேளாண் இடுபொருள்களையும் பெற்று பயனடையலாம்.