புதுக்கோட்டை, செப். 23: மாணவர்களிடையே சேவை மனப்பான்மையை உருவாக்குவதே ரோட்ராக்ட் சங்கங்களின் குறிக்கோள் என்றார் முன்னாள் துணை ஆளுநர் பி. கருப்பையா.
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் மகாராணி ரோட்டரி சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரோட்ராக்ட் சங்கத் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
வருங்காலச் சமுதாய சிற்பிகளான இளைஞர்களின் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. அவர்களின் சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பதே ரோட்டராக்ட் சங்கங்களின் குறிக்கோள்களாகும்.
சமூக முன்னேற்றத்திற்கு அவசியமானதொரு அமைப்பாகவும், நல்ல சமுதாயத்தை இளைஞர்களுக்கும், நல்ல இளைஞர்களை சமுதாயத்திற்கும் தருவதே ரோட்ராக்ட் அமைப்பின் நோக்கமாகும் என்றார்.
புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். அருணோதயம் ஜெயராமன் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்தார். கல்லூரியின் ரோட்ராக்ட் சங்கத் தலைவராக கே.கே. கண்ணன், செயலராக பி. சுபத்ரா, இணைச் செயலராக எம். சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பதவியேற்றனர். இதையொட்டி, கல்லூரி மாணவர் விடுதிக்கு எவர்சில்வர் குடிநீர் டிரம் வழங்கப்பட்டது.
சங்க துணை ஆளுநர் நாகப்பன், பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் ஆர்.ஏ. குமாரசாமி, முன்னாள் தலைவர்கள் சு. வள்ளியம்மை, பானுமதி, முதுகலைத் துறைத் தலைவர் அ.அ. ஞானசுந்தரத்தரசு ஆகியோர் வாழ்த்தினர். கல்லூரி முதல்வர் எம். இளங்கோவன் வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் எம். திருவள்ளுவன் நன்றி கூறினார்.