புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பில் தோóச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 13 பேருக்கு தனியார் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் பயில்வதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஐந்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில் அரசு செலவில் படிப்பதற்கான ஆணையை 13 பேருக்கு வழங்கிய அவர் கூறியது:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் ஒரு வட்டாரத்திற்கு 5-ம் வகுப்புத் தோóச்சி பெற்ற ஒரு மாணவரை தேர்வு செய்து நற்பெயர் பெற்ற சிறந்த உண்டு, உறைவிடப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் சேர்த்து பிளஸ் 2 வகுப்பு வரை பயில்வதற்கு ஏற்படும் செலவுகளை அரசு ஏற்கும் திட்டம் 2007-08 முதல் செயல்படுகிறது. அதன்படி அதிக மதிப்பெண் பெற்ற 13 மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில் பயில ஆணைகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் அரசுப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகளில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நல மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தனித் தேர்வு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் 13 மாணவ,மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி ஆணை வழங்கப்பட்டது என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சந்தோஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.