அறந்தாங்கி அருகே பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை சென்னையில் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆவுடையார்கோவில் அருகே கள்ளனேந்தலில் ரூ. 7.90 கோடியில் இக்கல்லூரிக்கு புதிய கட்டடங்கள் கட்ட முதல்வர் சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார்.
இதை அறந்தாங்கி நகரச் செயலர் க. சிவசண்முகம் தலைமையில் ஒன்றியச் செயலர்கள் அறந்தாங்கி பி.எம். பெரியசாமி, ஆவுடையார்கோவில் டி. கூத்தையா, மணமேல்குடி எஸ்.எம். அலி அக்பர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ். காமராஜ், போராசிரியர்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.