ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் தான் அதிகமான குற்றங்கள் நடப்பதால் அதைக் கண்காணிக்க கூடுதல் எண்ணிக்கையில் போலீஸார் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்தார் திருச்சி சரக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் இ.பி. சாம்சன்.
புதுக்கோட்டை ரயில் நிலையத்திலுல்ள காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் கூறியது:
ரயில் பயணிகள் தங்களது உடமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்த கூடுதலாகப் பெண் போலீஸாரை நியமிக்க ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும்.
நான்காண்டுகளுக்கொரு முறை திருச்சி சரகத்துக்குள்பட்ட விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 19 மாவட்டங்களில் உள்ள ரயில்வே காவல் நிலையங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி, தோட்டா, காவல் நிலையத்தின் செயல்பாடுகள், பணியாற்றும் காவலர்களின் குறைகள், குற்ற வழக்குகளின் நிலை, ரயில்வே இருப்பு பாதையில் நேரிட்ட விபத்து தொடர்பான வழக்குகளின் நிலவரம் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள ரயில்வே போலீஸாரின் வசதிக்காக காவலர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதில், தஞ்சையில் 43 குடியிருப்புகளும் திருச்சி ஆர்பிஎப் காவலர் குடியிருப்புகள், திருவாருரில் கூடுதலாக 6 குடியிருப்புகள் கட்டுவதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பழுதடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.