சுடச்சுட

  

  "விவசாயத்தில் சவால்கள்: குரல்வழி குறுஞ்செய்திகள் உதவும்

  By 'புதுக்கோட்டை  |   Published on : 07th February 2014 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயப் பணிகளில் உழவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க குரல்வழி குறுஞ்செய்தித் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்றார் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜகான்.

  எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர்.பி. ஞானமலர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற செல்போன் மூலம் குரல்வழி குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் தொடக்க விழாவில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

  விவசாயிகள் தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், அவற்றை சமாளிக்க பல்வேறு தகவல்களும், ஆலோசனைகளும் தேவைப்படுகிறது. அதை நிறைவு செய்யும் வகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் குரல்வழி குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தை தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

  குரல்வழி செய்தி அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். குரல்வழி செய்தி மூலம் அனுப்பப்படும் வானிலை தகவல்கள் மற்றும் ஆலோசனைகள், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை, விதைகள் மற்றும் ரகங்கள் தேர்வு, நவீன தொழில்நுட்பத் தகவல்கள், பயிர் பாதுகாப்பு தகவல்கள், சந்தை நிலவரங்கள், அரசு நலத்திட்டங்கள், பயிர் மேலாண்மை போன்ற தகவல்கள் விவசாய உற்பத்தியை பெருக்க உதவியாய் அமையும்.

  இந்த ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ள விவசாய நண்பன் உதவி மையம் விவசாயிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க உதவும். எனவே, விவசாயிகள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

  எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் பேசும்போது, இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் 2 குரல்வழி குறுஞ்செய்திகள் பதிவுசெய்த விவசாயிகளுக்கு அனுப்பப்படும். விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க விவசாய நண்பன் உதவி மையமும் செயல்படுகிறது. விவசாயிகள் 96777 59545, 96777 59549 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

  இதில், முன்னோடி விவசாயிகள் ஜி.எஸ். தனபதி, கே.பி. முருகேசன், ச.வே. காமராசு, ரெ. ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், மாவட்டம் முழுவதுமிருந்தும் 125 விவசாயிகள் பங்கேற்றனர்.

  முன்னதாக ஆராய்ச்சி மைய அலுவலர் எம். கலையரசி வரவேற்றார். தேசிய இணைய கல்விக் கழக பிரதிநிதி கே. பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai