Enable Javscript for better performance
தேவைக்கு அதிகமான நுகர்வைத் தவிர்க்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தேவைக்கு அதிகமான நுகர்வைத் தவிர்க்க வேண்டும்

    By புதுக்கோட்டை  |   Published on : 17th April 2015 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவையான பொருள்களை மட்டும் வாங்குவதே நல்ல வாழ்க்கைக்கு அடையாளம் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

    புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவுக்குத் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி அவர் பேசியது:

    பொருள்களை அல்லது சேவைகளை விலை, வாக்குறுதி அடிப்படையில் வாங்குபவரே நுகர்வோர். நுகர்வோரிடம் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ம் தேதியில் தேசிய நுகர்வோர் நாளையும், மார்ச் 15-ம் தேதியில் உலக நுகர்வோர் உரிமை நாளையும் கொண்டாடி வருகிறோம்.

    நுகர்வோர் பாதுகாப்பு, தகவல் பெறுதல், விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், அடிப்படைத் தேவைகள், பிரதிநிதித்துவம், குறைதீர்க்கப்படுவது போன்ற 8 விதமான உரிமைகளும், விழிப்புணர்வு, ஈடுபாடு, தேவைக்கு அதிகமான நுகர்வைத் தவிர்த்தல், தவறு செய்யும் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் குறித்து புகார் அளித்தல், வாங்கும் பொருள்களுக்கு உரிய ரசீதுகள், உத்திரவாதங்கள், தகவல் அறிக்கைகள் போன்ற அனைத்தையும் பத்திரமாக வைத்துக்கொள்வதுடன், வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை மட்டுமே வாங்குதல் ஆகியவற்றை நுகர்வோர் தங்களின் கடமைகளாகக் கொண்டு வாழவேண்டும்.

    நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகலாம். நுகர்வோருக்கு வாதாட வழக்குரைஞர் தேவையில்லை, தாமே வாதாடலாம் என்றார் ஆட்சியர்.

    விழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். முன்னதாக, நுகர்வோர் விழிப்புணர்வு உணவுப் பொருள் விற்பனை கண்காட்சி அரங்கை அவர் திறந்து வைத்தார்.

    விழாவில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கே.வி.எஸ். குமார், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயபாரதி, கோட்டாட்சியர் ஜோதிலிங்கம், மாவட்ட நுகர்வோர் குழு நிர்வாகிகள் சு. தனவேலு, க. வேழவேந்தன், லதாஉத்தமன், வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai