Enable Javscript for better performance
புதுகை அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைக்குமா?- Dinamani

சுடச்சுட

    

    புதுகை அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைக்குமா?

    By புதுக்கோட்டை  |   Published on : 17th April 2015 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூற்றாண்டைக் கடந்த சிறப்புக்குரிய புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் மேலோங்கியுள்ளது.

    கடந்த 1851-ல் புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட இந்த அரசு தலைமை மருத்துவமனைக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பெயரை தமிழக அரசு சூட்டியது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை நம்பியே இந்த மாவட்ட மக்கள் உள்ளனர். இங்கு சேர்க்கப்பட்டோருக்கு தீவிரச் சிகிச்சை தேவையென்றால் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க வேண்டிய சூழலே நீடிக்கிறது.

    இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசுக் காப்பீட்டுத் திட்டம் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறை மூலம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், வரும் 26-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை மத்தியக் குழுவினர் இறுதிக்கட்ட ஆய்வை மேற்கொள்ளவுள்ளனர்.

    இதன் முன்னோட்டமாக மருத்துவமனையில் அதற்கான தகுதியை உறுதி செய்வதற்கு தமிழ்நாடு சிறப்பு திட்ட ஆலோசகர் இளங்கோ தலைமையில் 15 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிகிச்சை, நிர்வாகம், ஆய்வகம், அறுவைச் சிகிச்சை அரங்கு, சுகாதாரம் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட 120 விதிமுறைகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனே சரிசெய்ய வேண்டுமென மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்திய ஆய்வுக் குழுவினர், மத்திய குழுவினரின் ஆய்வுக்குப் பிறகே தரச்சான்றிதழ் கிடைப்பது குறித்து உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில், மத்தியக் குழுவினர் மேற்கொள்ளும் இறுதிக்கட்ட ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது இறுதிக்கட்ட ஆய்வு என்பதால், இந்தச்சான்று கிடைக்க நான் முழு திறனுடன் பணிபுரிந்து சான்றிதழை அடையப் பாடுபடுவேன் என மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் உறுதி ஏற்று பணியாற்றி வருகின்றனர்.

    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியது:

    தமிழகத்தில் இருந்து தேசிய தரச்சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்த மருத்துவமனைகளில் நாமக்கல், சோலிங்கர், பத்மநாதபுரம் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளுக்கு சான்றிதழ் கிடைத்துள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருடைய கூட்டு உழைப்பால் மட்டுமே இது சாத்தியம் என்றனர்.

    இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறியது:

    தேசிய மருத்துவ தரச்சான்று (சஅஆஏ) பெறுவதற்கான விதிமுறைகளின்படி, தேவையான கட்டடங்கள், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு இந்த மருத்துவமனையில் நிறைவேற்றியுள்ளது. எனவே, தேசிய தரச்சான்று புதுகை அரசு தலைமை

    மருத்துவமனைக்கு உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai