Enable Javscript for better performance
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

    By DIN  |   Published on : 28th November 2016 12:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tamilnadu-map

     

    இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.
    புதுக்கோட்டையில் பொது அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை சார்பில் உடல் உறுப்பு தான வார விழாவை (நவ. 22 முதல் 27 வரை) முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கி வைத்து அமைச்சர் மேலும் பேசியது:
      உடல் உறுப்பு தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவர், மற்றொருவருக்கு அந்த உடல் உறுப்பை தானமாக அளிப்பது ஆகும். மேலும், ஒருவர் உயிருடன் இருந்தாலும் அவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயல் இழக்கும் நிலையில் அவருடைய இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கியமான உடல் உறுப்புகள் அவருடைய வாரிசுதாரர்கள் விரும்பினால் மற்றவர்களுக்குத் தானம் செய்யலாம். இந்த உடல் உறுப்புகள் பலர் உயிர் வாழ வழி வகுக்கும் என்பதால் உடல் உறுப்பு தானம் செய்வது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியதன் பலனாக, ஜாதி, மத பேதமின்றி மாநிலம் தாண்டி, இந்திய எல்லைகளைக் கடந்தும் உடல் உறுப்பு தானம் தமிழகத்திலிருந்து நடைபெற்று வருகிறது.
    மாநிலத்தில், இதுவரை மூளைச்சாவு அடைந்த 895 பேர், 4992 உடல் உறுப்புகளைத் தானமாக அளித்துள்ளனர். இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலம் இருக்கிறது. எனவே பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் செய்து பிறரது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்றார்.   
    பேரணியில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், உறுப்பு தானம் செய்வோம், உயிர்களைக் காப்போம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம் வழியாகச் சென்று நகர் மன்றத்தில் நிறைவடைந்தது.
    இதில் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், தேசிய நலவாழ்வு மைய திட்ட இயக்குநர் தரேஸ்அகமது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இ.ஏ. ரெத்தினசபாபதி, பி. ஆறுமுகம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வி.சி. ராமையா, அர்பன் கூட்டுறவு பண்டகசாலை சங்கத் தலைவர் ரா. ராஜசேகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் த. பரிமளதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, சார் ஆட்சியர் எஸ்.பி. அம்ரித், இணை இயக்குநர் சம்ஷாத்பேகம், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai