Enable Javscript for better performance
அறந்தாங்கி, கறம்பக்குடி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அறந்தாங்கி, கறம்பக்குடி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 15th October 2016 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் ரூ. 19.87 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    அறந்தாங்கி ஒன்றியம், ராஜேந்திரபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரகத் துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ. 10.29 லட்சத்தில் நடைபெற்றுவரும் கயன்குளம் தூர்வாரும் பணி, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், ரூ. 90 ஆயிரத்தில் கட்டப்படும் வீட்டின் கட்டுமானப் பணிகள், ரு. 90 ஆயிரத்தில் கட்டப்படும் மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகைப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
    மேலும், ரத்தினகோட்டையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 5.98 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம், பெருங்காடு ஊராட்சி, மாமண்டையில் ரூ. 1 லட்சத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் என ரூ. 19.87 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
    மேலும், சரியான அளவுகளில் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் எனவும், கிராமத்தில் வேலிக்கருவை மரங்களை முற்றிலுமாக அகற்றி, குளங்கள், கண்மாய்கள், சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து உரிய முறையில் நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
    ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். பொய்யமொழி, க. நடராஜன், ஊராட்சித் தலைவர் இந்திரா முத்துராமன், உதவிப் பொறியாளர் சுந்தர், செந்தில், தமிழ்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    கறம்பக்குடி ஒன்றியத்தில்...: இந்த ஒன்றியத்தில் ரூ. 18.57 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் சு. கணேஷ் வியாழக்கிழமை ஆய்வுசெய்தார். பிறகு அவர் கூறியது:
    கறம்பக்குடி ஒன்றியம், கீராத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ. 15.25 லட்சத்தில் நெல்லி, புளி, கருவை, நாவல், பலா, இலந்தை என 1 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 1.50 லட்சத்தில் கட்டப்பட்ட மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் கொட்டகை பணியையும், புதுவிடுதி ஊராட்சி, ஏ.டி. காலனியில் ரூ. 12,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவறை கட்டுமான பணியையும், வாண்டான் விடுதி ஊராட்சியில் இந்திரா நினைவு குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணி என மொத்தம் ரூ. 18.57 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.
    முன்னதாக, கீராத்தார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர், சத்துணவுக் கூடத்தில் சமையல் செய்யப்பட்டுள்ள உணவை சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார்.
    மேலும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு சிறந்த முறையில் கல்வி அளிப்பதுடன், அலுவலர்கள் சத்துணவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார்.
    ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், மணிசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai