புதுக்கோட்டை அருகே சோழர்கால கல்வெட்டு கண்டெடுப்பு
By DIN | Published On : 12th December 2017 08:20 AM | Last Updated : 12th December 2017 08:20 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சிறுஞ்சுனை கிராமத்தில் தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் மேற்கொண்ட ஆய்வில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
சிறுஞ்சுனை கிராமத்தில் மிக பழைமையானதும், சிதிலமடைந்த நிலையில் இருந்ததுமான சிவன் கோயிலில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களோடு எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சோழர்கால ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியது:
சிறுஞ்சுனை கிராமத்தில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலில் கடந்த சில நாள்களாக ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆய்வின்போது, 13-ம் நூற்றாண்டை சேர்ந்த புரவரி வசூல் செய்யும் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த கல்வெட்டில், சிறுசுனையூரான விருதராஜா பயங்கர சதுர்வேதி மங்கலம் புரவரி சிகரணத்தார் ஆசிரியம் என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வூர் விருதராஜா பயங்கரன் என்ற பெயருடன் விளங்கிய முதலாம் குலோத்துங்கன் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது.
மேலும், "விருதராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம்' என்ற பெயருடன் சிறு ஊர்களின் தலைமை இடமாக இக்கோயில் விளங்கியதும் தெரியவருகிறது.
இந்த ஊரின் புரவரியை சிகரணத்தார் என்று அக்காலத்தில் நியமிக்கப்பட்டு இருந்த கிராம நிர்வாக அதிகாரியே வசூலித்துக் கொள்ள உரிமை வழங்கி இருப்பதை ஊர் மக்களுக்கு அறிவிக்கவே இத்தகைய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இக்கல்வெட்டின் மூலம் சோழர்கால மன்னராட்சி நிர்வாகத்திலேயே வரி வசூலிக்கும் உரிமையை உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி அந்தந்த கிராமங்களின் உள்ளூர்த் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்துள்ளது என்றார்.