சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

புதுகை அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு தகவல்கள் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மறமடக்கி கிராமம், பட்டாகுளத்தில் சில மாதங்களுக்கு முன் கிடைத்த கல்வெட்டு தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Updated On :23 நவம்பர் 2017, 8:29 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மறமடக்கி கிராமம், பட்டாகுளத்தில் சில மாதங்களுக்கு முன் கிடைத்த கல்வெட்டு தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி  வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் சந்திரபோஸ் அக்கல்வெட்டின் வரிகளைப் படித்து அவர் புதன்கிழமை அளித்த விளக்கமாவது: 
கல்வெட்டின் இரு புறங்களிலும் எழுத்துகள், சக்கரங்கள் உள்ளன. இதன் மேல்பகுதி, அடிப்பகுதி குறுகியும் நடுப்பகுதி பெருத்தும் மத்தளம் போன்ற வடிவில் உள்ளது. இக்கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ எனத் தொடங்கி, "வீர பாண்டிய தேவற்கு முதலாவது தெற்குப் பாலையூர் நாட்டு குறும்பில் நாடாந குறும்பில் நாட்டு ஊர் மறமடக்கியாந இராசேந்திரசோழபுரத்து நகரத்தார்கள் குறும்பில் நாயநார் கோயிலுக்கு குளப்புர மாண்யம் கொடுத்தனர்' என்பதைக் கூறுகின்றது. அது பணமாகக் கொடுக்கப்பட்டதா அல்லது தானியமாகக் கொடுக்கப்பட்டதா என்ற செய்தி கல்வெட்டில் இல்லை.
 கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் வீர பாண்டியன், மாறவர்மன் முதலாம் குலசேகரப்பாண்டியனின் மகனாக இருக்கலாம். இக் கல்வெட்டு வீர பாண்டியனின் முதலாம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாலையூர் நாட்டுக்குட்பட்ட குறும்பில் நாட்டு மரமடக்கியான இராசேந்திரச் சோழபுரத்து நகரத்தார்கள் ஏற்கெனவே குரும்பூர் கோயிலுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலத்தில் ஒவ்வொரு முறையும் விளைச்சலைப் பெற்ற பிறகு "குளப்புரமாக' எனப் பெயரிடப்பட்ட வருவாயை குறும்பில் கோயிலுக்கு கொடுத்தனர் என்பதைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. "குளப்புரமாக' என்பது குத்தகை போன்ற பொருளில் வழக்கமாக கல்வெட்டில் பயின்று வரும் ஒரு வருவாய் சொல் ஆகும். 
 இந்த ஊரில் இன்றும் நகரத்தார் குடியிருந்து வருகின்றனர். இவ்வூர் பற்றியும் இவ்வூர் நகரத்தார் பற்றியும் குரும்பூர்  கோயிலில் உள்ள மன்னர் பெயர் குறிப்பிடப்படாத கல்வெட்டு ஒன்று விவரங்களைக்கூறுகிறது. இவ்வூர் (மரமடக்கியான இராசேந்திரச்சோழபுரம்) நகரத்தார்கள் இவ்வூரின் காவல் பணிக்காக முன்னோர் செய்தபடி ஆண்டுக்கு பன்னிரண்டு ரூபாய் பணம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். இந்தக் கல்வெட்டிலும் பாலையூர்  நாடு முதலிலும், குறும்பில் நாடு பிறகும் குறிக்கப்படுகின்றன.  பாலையூர்  நாடு என்பது கிபி. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஏற்பட்ட நாடாகும். புதுக்கோட்டைக்குத் தென் கிழக்கில் சுமார்  15 கிமீ. தொலைவில் அமைந்துள்ள பாலையூரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்நாடு ஏற்பட்டது. பாலையூர்  நாட்டுக்குட்பட்ட குறும்பில் நாடு என்று வருவது கல்வெட்டில் புதுமையாக உள்ளது. குறும்பில் நாடு என்று இவற்றிற்கு முன்பு வேறு எந்த ஆவணங்களிலும் பதிவு பெறவில்லை. ஆனால் பிற்காலத்தில் எழுதப்பட்டுள்ள குரும்பூர் கல்வெட்டில் (ஆவணம் 28 -ல் வெளிவந்துள்ளது) இதுபோன்ற இரு நாடுகளும் வருகின்றன. 
அறிவுறுத்தலின் படி மறு ஆய்வு:  குரும்பூர்  (அறந்தாங்கி வட்டம்) கல்வெட்டில் (வரி.1) இராசஇராசவளநாட்டுப் பாலையூர்  நா(வரி.2)ட்டுக் குறும்பில் ஊரவற்குறும்பிநா(வரி.3)ட்டு மறமடக்கி ஆன  இராசேந்திரச் சோ(வரி.4)ழபுரத்து . . . என்று தொடர்கின்றது. இதில் பாலையூர்  நாட்டு குறும்பில் ஊரவற் என்று வந்த பிறகு மீண்டும் குறும்பில் நாடு வருவதை ஏற்க மறுத்து அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கல்வெட்டியல் துறை பேராசிரியர் சுப்பராயலு (ஓய்வு) அறிவுறுத்தினார். எனவே,  இக்கல்வெட்டு மறு ஆய்வு செய்யப்பட்டது. 
வரி.2-இல் குறும்பில் ஊரவற்கு(கு)றும்பிநா என்று அதாவது இரண்டு "கு' என்ற எழுத்து ஒன்றாக வரும்போது  ஒரு "கு' மட்டும் எழுதும் வழக்கு அக்காலத்தே இருந்துள்ளது. ஒரு "கு' விடுபட்டிருந்தது இந்த குழப்பத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. 
பாலையூர்  நாட்டில் குறும்பில் ஒரு ஊராக இருந்ததுடன் குறும்பில் நாடு என்ற நாட்டுப்பிரிவாகவும் இருந்ததாகக்கொள்ள முடிகின்றது.
குரும்பூரிலிருந்து தென் திசையில் ஒன்றும், வட திசையில் ஒன்றும் என இரண்டு ஊர்கள் மறமடக்கி என்ற பெயரில் தற்போது உள்ளன. மறமடக்கியான் இராசேந்திரச் சோழபுரம் என்ற ஊர் எது என்பதை உணர்த்தும் வகையில் மரமடக்கியில் கிடைத்த கல்வெட்டு உறுதிப்படுத்தியுள்ளது. ஊர், நாடு பற்றிய ஆய்விற்கு பயனுள்ள செய்திகளை மறமடக்கி, குரும்பூர்  கல்வெட்டுகள் தந்துள்ளன. 
ஆய்வின் போது  மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் கணேஷ்பிரபு  உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.