தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்ந்தது என்றார் மருத்துவர் அனிதாதனசேகரன்.
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி மருத்துவர் அனிதாதனசேகரன் மேலும் பேசியது:
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தாய்ப்பால் புகட்டும் இயல்பை போற்றும் நெறி வளர்ந்திருப்பதையும் தாய்ப்பால் மானத்தையும் வீரத்தையும் ஒருசேர ஊட்டும் உரமுடையதென்பதை ஒரு தாய் புறநானூற்றில் சூளுரைக்கும் காட்சியையும் நினைத்து மகிழலாம். உலகளாவிய நிலையில் தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் பலருக்கு வழிகாட்டியாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைகளே தமிழகத்தில் குறைவு.
ஒவ்வொரு பெண்ணும் குறைந்தபடசம் 5 குழந்தைகள் பெற்றனர். அதைவிட முக்கியம் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பாலை மட்டும் கொடுத்து வளர்த்தனர். அவ்வளவுக்கு அவர்களிடம் திறன் இருந்ததற்கு முழுக் காரணம் உணவை சரியான நேரத்தில் சாப்பிட்டு, காய்கறி, பழ வகைகளை எடுத்துக் கொண்டதால்தான். போதுமான சத்துணவு, அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன என்றார்.
விழாவில், கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன், புதுக்கோட்டை டீம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் கே.ஹெச். சலீம் கல்லூரியின் செயலர் கே.ஆர். குணசேகரன், முதல்வர் கு. தனம்,துணை முதல்வர் குமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.