புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே தொடையூரில் ரயில் பாதையில் உள்ள லெவல் கிராசிங்கை அகற்றிவிட்டு அங்கு சுரங்கப் பாதை அமைக்க அப்பகுதியினர் திங்கள்கிழமை எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்சி - புதுக்கோட்டை இடையேயான ரயில் பாதையில் நார்த்தாமலை அருகே தொடையூரில் லெவல் கிராசிங் உள்ளது. இதைக்கடந்துதான் வத்தனாக்குறிச்சி, திருமலைராயபுரம், செம்பாட்டூர், தொடையூர், முத்துக்காடு, உப்பிலிக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள லெவல் கிராசிங்கை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.
லெவல் கிராசிங்கை அகற்றிவிட்டு சுரங்க பாதை அமைத்தால் அவ்வழியே கதிர் அறுவடை இயந்திரம், பொக்லைன் உள்ளிட்ட அதிக உயரம் கொண்ட வாகனங்கள் செல்ல முடியாது. மாறாக, 10 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் எனக்கூறி திங்கள்கிழமை சுரங்கபாதை அமைக்கும் பணியை அப்பகுதி பொதுமக்கள் தடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்ற வெள்ளனூர் போலீஸார் சமாதானம் செய்து பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். இதைத்தொடர்ந்து, ஆட்சியர் சு.கணேஷிடம் அப்பகுதி மக்கள் சுரங்கப்பாதை அமைப்பதை நிறுத்த நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.