புதுகை, பெரம்பலூர்,அரியலூரில் கடையடைப்பு ; பேருந்துகள் நிறுத்தம்

திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
Published on
Updated on
2 min read

திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.  மாவட்டம் முழுதும் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில்  உள்ள கட்சி அலுவலகங்கள், பொது இடங்களில் உள்ள திமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் திரண்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கதறியழுதவாறு கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் உள்ள 119  மதுக்கடைகளும் மூடப்பட்டன. மேலும்,13 திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததாலும், தனியார் பேருந்துகள் பாதி வழியில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பியதாலும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமத்துக்குள்ளாகினர்.கருணாநிதியின் மறைவு திமுகவினர், பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்,அரியலூரில்...  திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையடுத்து,  பெரம்பலூரில் இயக்கப்பட்ட தனியார், அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியதால், பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் சாலையோரங்களில் காத்துக்கிடந்தனர்.
செவ்வாய்க்கிழமை மாலை மாலை முதலே வெளி மாவட்டங்களில் இருந்து பெரம்பலூர் வழியாக இயக்கப்படும் ஆம்னி பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வமான தகவல் இரவு 6.40 மணிக்கு வெளியானதால், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.  
இதனால், பேருந்து நிலையங்கள், நான்கு சாலை சந்திப்பு, பாலக்கரை, மூன்று சாலை சந்திப்பு பாலக்கரை உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் கிராமப்புற மக்கள், வெளியூரைச் சேர்ந்த பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேருந்துக்காக சாலையோரங்களில் காத்துக்கிடந்தனர். 
இதேபோல், நகரில் உள்ள உணவகங்கள், தேனீரகங்கள், மளிகைக்கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கடகளும் மூடப்பட்டன. இதனால், பயணிகள் செய்வதறியாமல் தவித்தனர். மேலும், மாவட்டத்தில் உள்ள 34 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தகவலறிந்ததும், நகரில் உள்ள  பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டுநர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர்.  மகளிரணியைச் சேர்ந்த பெண்கள் கதறி அழுதனர். 
நகரின் பிரதான சாலைகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. திமுக கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறந்தன.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பேருந்துகள் சேவைகள் நிறுத்தப்பட்டன.அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
கடைகள் அடைப்பு: ஜயங்கொண்டம்,அரியலூர்,செந்துறை,திருமானூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணிக்கே மூடப்பட்டன. பெரிய வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்கே மூடப்பட்டன. அரசுப் பேருந்துகள் பணிமனைக்கு திருப்பின: வெளி மாவட்டம் மற்றும் கிராமப் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசுப் பேருந்துகள், அரியலூர் பேருந்து நிலையம், ஜயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு அங்குள்ள பணிமனைக்கு திருப்பிவிடப்பட்டன. இதேபோல் தனியார் பேருந்துகள் சேவையும் நிறுத்தப்பட்டதால் வெளியூர் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.