புயல் பாதிப்பு பகுதிகளை மீண்டும்பழைய நிலைக்கு கொண்டுவர புனரமைப்பு: சி. விஜயபாஸ்கர்

புயல் பாதித்த பகுதிகளில் மீண்டும் பழைய நிலைமையில் கொண்டுவர தமிழக அரசு உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள்


புயல் பாதித்த பகுதிகளில் மீண்டும் பழைய நிலைமையில் கொண்டுவர தமிழக அரசு உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 வகையான நிவாரணப் பொருள்களை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பெரும்பான்மையான பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசின் தீவிர மீட்பு பணிகள் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. மேலும் தமிழக முதல்வரின் உத்தரவின் கீழ் நிவாரணப்பொருள்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் தாயினிப்பட்டி மற்றும் அன்னவாசல் ஒன்றியம் மதியநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 வகையான நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கும்பத்திற்கு தேவையான அனைத்து பொருள்களும் தரமான முறையில் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணப்பொருள்கள் வழங்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக்கணக்கில் நிவாரணத்தொகை படிப்படியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த நிவாரணத்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டடு வருகிறது என்றார்.
உடன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, கூட்டுறவு சங்கத் தலைவர் ராமசாமி, ஆத்மா குழு தலைவர்கள் சாம்பசிவம், பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com