Enable Javscript for better performance
மாவட்டக் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பத்துநாள் திருவிழா மண்டகபடி உபயதாரர்களால் சிறப்பாக நடத்தப்பட்டன. தொடர்ந்து, வியாழக்கிழமை தேரோட்டமும், வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன், திரவியம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், மாவிளக்கு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.  
    கந்தர்வகோட்டையிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கந்தர்வகோட்டை, சுந்தம்பட்டி, காட்டுநாவல், மட்டாங்கால், சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, மோகனூர், புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளாக வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
    கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள்: வேம்பன்பட்டி ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவிற்கு வந்து சென்ற பக்தர்களுக்கு கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட  எந்தவொரு வசதியையும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து தரவில்லை. மேலும் கோயில் நுழைவுவாயிலில் கழிவுநீர் தேங்கி சேரும், சகதியுமாக இருந்ததால் கோயிலுக்குள் சென்று வர பக்தர்கள் சிரமப்பட்டனர்.  
    அறந்தாங்கி:  அறந்தாங்கி மூக்குடி எல்லையில்  உள்ள பொற்குடைய அய்யனார் கோயிலுக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். காவடி எடுத்து வந்த பக்தர்களின் தாகம் தீர்க்க ஏதுவாக மோர், சர்பத், பொங்கல், புளியோதரை வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை அறந்தாங்கி போலீஸார் செய்திருந்தனர்.
    பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவில் சுற்று வட்டாரங்களில் வந்திருந்த கிராம மக்கள் பால்குடம், காவடி எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிபட்டனர். விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்,  வீதியுலா நடைபெற்றது.
    விராலிமலை:  விராலிமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் பங்குனி உத்திர விழா வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
    விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி, மெய்க்கண்ணுடையாள், வன்னிமரம், அய்யப்பன், முனியப்பன், இலுப்பூர் தரம்தூக்கி பிடாரியம்மன், சிவன் கோயில், அன்னவாசல் விருதபுரீஸ்வரர், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai