Enable Javscript for better performance
ஆலங்குடி அருகே  வறட்சிக்கு காரணமான தைலமரங்களை அகற்றிய இளைஞர் குழுவினர்- Dinamani

சுடச்சுட

    

    ஆலங்குடி அருகே  வறட்சிக்கு காரணமான தைலமரங்களை அகற்றிய இளைஞர் குழுவினர்

    By DIN  |   Published on : 18th May 2018 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குடி அருகே வறட்சிக்கு காரணமான தைலமரங்களை இளைஞர்கள் குழுவினர் வியாழக்கிழமை அகற்றியதோடு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறை, தனியாருக்கு சொந்தமான சுமார் 1 லட்சம் ஏக்கரில் தைலமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதோடு, காற்றின் ஈரப்பதத்தை தைலமரங்கள் உறிஞ்சி விடுவதால் வறட்சிக்கு காரணமான தைலமரங்களை அகற்றி பல்லுயிர் காடுகளை உருவாக்க வேண்டுமென விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    நிகழாண்டில், பிற மாவட்டங்களில் பெய்யும் அளவுக்கு கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. இதனால், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதோடு, சாகுபடிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    இந்நிலையில், சமூகவலைதளங்களில் இணைந்த இளைஞர்கள் "பிறந்த ஊருக்கு புகழைச் சேரு' என்ற குழுவை உருவாக்கி மாணவர்கள், சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்தனர். அதில், மாவட்டத்தின் வறட்சிக்கு காரணமான தைலமரங்களை மாவட்ட நிர்வாகம் அகற்ற வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
    அதன்படி, குழுவில் உள்ளவர்கள் வறட்சிக்கு  காரணமான தைலமரங்களை அகற்ற கோரி மே 12ஆம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்ததோடு, விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 
    இந்நிலையில், ஆலங்குடி அருகே வெட்டன்விடுதியைச் சேர்ந்த வினோத்குமார் (37) என்ற விவசாயி தனக்கு சொந்தமான 2.5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தைலமரங்களை அகற்ற முன் வந்தார். 
    இதைத்தொடர்ந்து, குழுவினருடன், திருநங்கைகள் இணைந்து துவார் கிராமத்தில் வினோத்குமாருக்கு சொந்தமான 2.5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தைலமரங்களை அகற்றி, பல்லுயிர் காடுகளை வளர்க்கும் விதமாக மா, பலா, வாழை, தென்னை மரக்கன்றுகளை நட்டனர். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பல தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். 
    இதுகுறித்து குழுவினர் கூறியது: மாவட்டத்தை வறட்சியில் இருந்து காக்கும் நோக்கில், வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள  தைலமரங்களை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, தனியார் நிலங்களில் உள்ள தைலமரங்களை அகற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai