Enable Javscript for better performance
புதுகை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சரிவு: ஆய்வுக்குப் பிறகு நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலர்- Dinamani

சுடச்சுட

    

    புதுகை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சரிவு: ஆய்வுக்குப் பிறகு நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலர்

    By DIN  |   Published on : 18th May 2018 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பான ஆய்வுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜா.
    தமிழகம் முழுவதிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப். 6ஆம் தேதி நிறைவடைந்தது புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி, தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 167 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 9,723 பேரும், மாணவியர் 11,382 பேர் என மொத்தம் 21,105 பேர் எழுதிய தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 
    புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கல்வி மாவட்டங்களிலும் மாணவர்கள் 8,097 பேரும், மாணவியர் 10,588 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 88.53 சதவீதமாகும். கடந்தாண்டைக் காட்டிலும் 3.63 சதவீதம் குறைவாகும். கடந்தாண்டு 92.16 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    மாவட்டத்தில் உள்ள  99 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 அரசுப் பள்ளிகள் மட்டும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.  
    அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்: மாவட்டத்தில் உள்ள 99 அரசுப் பள்ளிகளில் இருந்து 15,135 மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 12,921 பேர் தேர்ச்சியடைந்தனர். 
    மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்  85.37 சதவீதமாகும். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிவடைந்து வருவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை, பொதுத் தேர்வுக்கு தயாராகுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய பயிற்சியின்மை முக்கிய காரணம் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    கடந்தாண்டு (2017) பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் 21வது இடம் பெற்றிருந்த புதுக்கோட்டை மாவட்டம், நிகழாண்டில் தேர்ச்சி விகிதம் 3.63 சதவீதம் குறைந்ததன் மூலம் 22வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.  
    இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜா கூறியது: மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் சரிவடைந்தது தொடர்பாக கல்வி அலுவலர்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. 
    இந்தக் கூட்டத்திற்கு பிறகு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.  
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai