Enable Javscript for better performance
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது வருவாய்த் தீர்வாயம்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது வருவாய்த் தீர்வாயம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டத்திற்குள்பட்ட வருவாய் வட்டங்களில் வியாழக்கிழமை தொடங்கிய வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மே 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1427ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசியது: 
    ஆண்டுதோறும் வருவாய் தீர்வாய கணக்குகள் முடிக்கும் வகையில் ஜமாபந்தி நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருவாய் தீர்வாயம் வருகி மே 23ஆம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் 763 வருவாய்க் கிராமங்களை உள்ளடக்கிய 12 வட்டங்களில் மாவட்ட ஆட்சியர் வருவாய் தீர்வாய கணக்குகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் ஆட்சியர்.
    தொடர்ந்து, புதுநகர் உள்வட்டத்திற்குள்பட்ட மஞ்சப்பேட்டை, புனக்குளம், புதுநகர், அரியாணிபட்டி, பழைய கந்தர்வக்கோட்டை, பிசானத்தூர், வீரடிப்பட்டி, முதுகுளம், குளத்தூர், சேவியர் குடிக்காடு, பெரியகோட்டை, புதுப்பட்டி, நடுப்பட்டி, நம்புரான்பட்டி உள்ளிட்ட குறுவட்டங்களுக்கு தீர்வாய கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.
    குறிப்பாக வருவாய்த் துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இப்பகுதிகளின் அடங்கல், சிட்டா, நிலவரைவு படம், அடங்கலில் பதிவு செய்யப்படும் சாகுபடி பரப்பளவு விபரங்கள், பிறப்பு, இறப்பு பதிவேடுகள், மக்கள் தொகை விகித பதிவேடுகள், நிலஅளவை கருவிகள், மழைக் கணக்கு, வரி வசூல் விபரங்கள் உள்ளிட்ட 20 வகையான கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது. 
    கந்தர்வக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, குறுவட்டங்களை சார்ந்த வருவாய் கிராம மக்கள் கலந்து கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் நலத்திட்ட உதவி, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டது. 
    வருவாய்த் துறை சார்பில் திருமண உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைக்கான ஸ்மார்ட் கார்டு, இறப்பு உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    வருவாய்த் தீர்வாயம் குறிப்பிட்ட நாள்களில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். ஜமாபந்தியின் நிறைவு நாளில் (மே 23) வருவாய்த் தீர்வாய அலுவலர் தலைமையில் பொது மக்கள் கலந்து கொள்ளும் குடிகள் கூட்டம் நடைபெறுகிறது.  கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் க.பொன்மலர், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தலைமை வகித்தார். முதல் நாளில் காரையூர் உள்வட்ட கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 41 மனுக்கள் பெறப்பட்டது.
    தணிக்கை அலுவலர் எஸ்.கண்ணா கருப்பையா, வட்டாட்சியர் எஸ்.சங்கர், துணை வட்டாட்சியர்கள் வரதராஜன், விஸ்வநாதன், காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா, கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். 
    வருகிற மே 22ஆம் தேதி அரசமலை பிர்க்காவிற்கும், 23ஆம் தேதி பொன்னமராவதி பிர்க்காவிற்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. அன்றைய தினம் (மே 23) பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு நடைபெற உள்ளது.
    குளத்தை கண்டுபிடிக்கக் கோரி மனு அளிப்பு : 
     விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடும்பாளூர் குறு வட்டத்திற்குள்பட்ட 16 வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு டிஸ்டில்லரீஸ் உதவி ஆணையர் மு.வடிவேல் பிரபு தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை தொடர்பாக மனுக்கள் பெற்றார்.
    விராலிமலை வட்டாட்சியர் என்.செல்வநாயகம் முன்னிலை வகித்தார். 
    கொடும்பாளூரைச் சேர்ந்த காந்தியவாதி என். செல்வராஜ் கொடும்பாளூரில் இருந்த சத்திரம் குளத்தை காணவில்லை என்றும், அதனைக் கண்டுபிடித்து தரக் கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜமாபந்தியில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி முழக்கமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து உதவி ஆணையர் மு.வடிவேல் பிரபு கூறியது: கொடும்பாளூர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்ப் பிடிப்பு பகுதிகளை சுத்தம் செய்து நீர் நிலைகளை பாதுகாக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai