தமிழில் சிறப்பிடம் பெற்றோருக்கு பாசறை பட்டயம், விருது

பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறை சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் 95 விழுக்காட்டிற்கு மேல்

பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறை சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் 95 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாசறை பட்டயம், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு தொல்காப்பியர் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்தமிழ்ப்பாசறைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு தலைமை வகித்தார். விழாக் குழுத் தலைவர் கோ. பார்த்தசாரதி வரவேற்றார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. ராஜேந்திரன் பேசியது:
உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அறிவோடு இருக்கிறார்கள் என்று பொருள், அறிவுதான் உயிர் என்கிறார் தொல்காப்பியர். அறிவு என்பது நமக்கு மரபு வழியாக இருந்தாலும் அதை தெரியப்படுத்துவோர் ஆசிரியர்கள். குழந்தைகளுக்கு முன் மாதிரியாக பெற்றோர், ஆசிரியர்கள் இருக்க வேண்டும். தமிழாசிரியர்கள் மாணவர்கள் மனதில் இடம் பெற்றவர்களாகத் திகழ வேண்டும். தெரிந்த தமிழைக் காட்டி தெரியாத கடவுளைக் காட்டுகிறார் வள்ளுவர். மொழிதான் முக்கியம். மொழி இல்லையென்றால் கடவுள் இல்லை.  முத்தமிழ்ப்பாசறை போன்ற தமிழ் அமைப்புகள் நாடெங்கிலும் தோன்றி தமிழ் போற்றப்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பொன்னமராவதி வட்டாரத்தை சார்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10,12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ்பாடத்தில் 95 விழுக்காடு மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற 260 மாணவ, மாணவியர்களுக்கு பாசறை பட்டயம் விருது, பயிற்றுவித்த 69 ஆசிரியர்களுக்கு தொல்காப்பியர் விருதுகளை வழங்கினார். தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச்செயலர் சு. நாகேந்திரன், அறங்காவலர் குழுத் தலைவர் மருத்துவர் மு. சின்னப்பா, முன்னாள் தலைவர்கள் மருத்துவர் சு. மதியழகன், மூ.சு. நடராஜன், கி. ரமேஷ், தொழிலதிபர் அ. முகமது சித்திக் ஆகியோர் வாழ்த்தினர். அறங்காவலர்கள் நெ. ராமச்சந்திரன், சிஎஸ். முருகேசன்,பெ. சதாசிவம்,ராஜாமுகமது ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். செயலர் அ. தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com