விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

அறந்தாங்கியில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கியில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவர் பி.ஆர். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு நகரச் செயலாளர் என். செல்வராஜ், நகரப் பொருளாளர் எம்.கருப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஒய்வு துரை. தாமரைச்செல்வன் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். இந்து முன்னணி மாநில சிறப்புரையாளர் கே.கே.ராஜா, மாவட்டச் செயலாளர் வி.வடிவேல், இந்து அமைப்பு நிர்வாகி டி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
வடகரை முருகன் ஆலயம், மண்டிக்குளம் மாரியம்மன் கோவில், சின்ன அண்ணாநகர் பாலசுப்பிரமணிசுவாமி ஆலயம், குறவர் காலனி அருள்மிகு சித்திவிநாயகர் கோவில், கல்லுப்பட்டரை வீதி, கன்னித்தோப்பு நொண்டி முனிஸ்வரர் ஆலயம், களப்பகாடு முதல்வீதி, சிலோன்காலணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வடகரை முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் திருக்குளத்தில் கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தை முன்னிட்டு, அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.தட்சிணாமுர்த்தி தலைமையில் காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக, அறந்தாங்கி நகர பொதுச்செயலாளர் என்.புகழேந்தி வரவேற்றார். நிறைவில் நகர துணைத் தலைவர் எம்.குமரவடிவேல் நன்றி கூறினார்.
பொன்னமராவதி: பொன்னமராவதி சிவன் கோயில் திடலில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு விழாக்குழு தலைவர் பி. செந்தில்குமார் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஆர்எம்.ராஜா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் புதுப்பட்டி நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், இந்திரா நகர், பூக்குடி வீதி, பாலமேடு வீதி, நகைக்கடை பஜார், அண்ணா சாலை, காந்திசிலை, குறவன்பாறை உள்ளிட்ட 15 விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர் பங்கேற்றனர்.
சிவன் கோயில் அருகே தொடங்கிய ஊர்வலம் நாட்டுக்கல், வலையபட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே வந்து அமரகண்டான் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. ஊர்வல வர்ணனைகளை தமிழாசிரியர் சிஎஸ்.முருகேசன் செய்திருந்தார். மேலைச்சிவபுரி, கண்டியாநத்தம், மைலாப்பூர் என பொன்னமராவதி வட்டாரத்தில் மொத்தம் 33 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் பி.தமிழ்மாறன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பெரிய கடைவீதியில் செல்வ விநாயகர், அக்கச்சிப்பட்டி வடுவச்சியம்மன் கோயில் விநாயகர், கோவிலூர் தெரு விநாயகர் மற்றும் கந்தர்வகோட்டை பேருந்துநிலையத்தில் பாஜக சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் என 5-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உள்பட மொத்தம் 20 விநாயகர் சிலைகள் கந்தர்வகோட்டை பெரிய கடைவீதி, புதுகை சாலை, பேருந்துநிலையம், பெருமாள்கோயில் தெரு வழியாக சிவன் கோயில் சங்கூரணி குளக்கரைக்கு வந்தடைந்தன. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து சங்கூரணி குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com