"வணிகர்களை மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றிவருகிறது'

வணிகர்களை மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றிவருகிறது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.    

வணிகர்களை மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றிவருகிறது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.    
 புதுகையில் வர்த்தகக் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை வெள்ளி விழா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சீனு.சின்னப்பா தலைமை வகித்தார். கூட்டத்தில் , குன்றக்குடி பொன்னபல அடிகளார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பொது செயலாளர் கோவிந்தராஜூலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், கொள்ளிடம் உபரிநீரை புதுக்கோட்டை பாசன வசதிக்காக திருப்பிவிட வழிவகை செய்ய வேண்டும். பட்டுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பழநிக்கு ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும். புதுக்கோட்டை நகரில் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை நகரில் அதிகமாக சுற்றித்திரியும் நாய்களையும், மாடுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். புதுக்கோட்டை நகரில் உள்ள பழைய மருத்துவமனையை திறந்து சாதாரண சிகிச்சைகளும், முதலுதவி சிகிச்சைகளும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கறம்பக்குடி நகரில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். கறம்பக்குடியில் பாரத ஸ்டேட் வங்கி தொடங்க வேண்டும். ரூ.10 நாணயங்களை வங்கிகளிலும், அரசு அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள வேண்டும். கறம்பக்குடி சார்நிலை கருவூலத்திற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சென்னை செல்லும் விரைவு ரெயில்கள் திருமயம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை வழியாக மணப்பாறைக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். திருமயம் ஒழுங்குமுறை விற்பனை கட்டிடத்தில் குளிர்பதன கிடங்கு வசதி அமைக்க வேண்டும். புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும். புதுக்கோட்டை நகரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் புதுகை மாவட்டத்தை சேர்ந்த வாகனங்களுக்கு உள்ளூர் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து,  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசியது: வணிகர்களை மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றிவருகிறது. குறிப்பாக ஆன்லைன் வர்த்தகம், நேரடி அன்னிய முதலீடு, வால்மார்ட் உள்ளிட்டவற்றால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் வர்த்தகம், நேரடி அன்னிய முதலீடு போன்றவற்றை தடை செய்யாவிட்டால் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள  தேர்தலில் வணிகர்களால் ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலை ஏற்படும்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி வரி 5 முதல் 12 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com