மூச்சுக்குழாய் சுருங்கிய பெண்ணுக்கு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை

மூச்சுக்குழாய் சுருங்கியதால் சிரமப்பட்டு வந்த பெண்ணுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி 

மூச்சுக்குழாய் சுருங்கியதால் சிரமப்பட்டு வந்த பெண்ணுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது அப்பெண் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.
புதுக்கோட்டை கீழ 4 ஆம் வீதியைச் சேர்ந்தவர் நிவேதிதா பிரியதர்ஷினி (21). இவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய நிவேதிதாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து கடந்த மார்ச் 12ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிவேதிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஆறுமுகம், காது மூக்கு தொண்டை பிரிவு அறுவைசிகிச்சை நிபுணர் கனிமொழி உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு கடந்த வாரம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  7 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிவேதிதா புதன்கிழமை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்த அறுவைசிகிச்சை குறித்து மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஏ.எல். மீனாட்சி சுந்தரம் கூறியது:
இதயத்துக்குக் கீழே மார்பைத் திறந்து இந்த  அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மயக்கநிலையிலேயே ஆக்ஸிஜனையும் செலுத்த வேண்டியிருந்ததால் செயற்கையாக இரு குழாய்கள் பொருத்தப்பட்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடித்து சுருங்கியிருந்த மூச்சுக்குழாய் பகுதி சரி செய்யப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ. 4 லட்சம் வரை செலவாகும் எனக் கருதப்படும் இந்த சவாலான அறுவைசிகிச்சை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுமையாக இலவசமாகவே செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com