கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை
By DIN | Published On : 14th April 2019 03:34 AM | Last Updated : 14th April 2019 03:34 AM | அ+அ அ- |

கோடை விடுமுறையில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. வனஜா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோடை வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. ஆனால் குழந்தைகள் நலனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒரு சில பள்ளிகள் தங்களுடைய பெயர்களைத் தக்க வைத்து கொள்ள அடுத்த ஆண்டுக்கான பாடத்தை விடுமுறை நாள்களிலேயே எடுக்கின்றன. இதுகுறித்த தகவல் கிடைக்கப் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 3 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் தொடங்கும். பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்கப்படும்.