தொகுதி இல்லாவிட்டாலும்  புதுகையில் பிரசார விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி இல்லாவிட்டாலும் கூட, தேர்தல் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி  தேர்தல்

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி இல்லாவிட்டாலும் கூட, தேர்தல் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி  தேர்தல் பிரசாரம் இந்த மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மறு சீரமைப்பின்போது கலைக்கப்பட்டு, புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடனும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியுடனும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியுடனும், திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் சிவகங்கை மக்களவைத் தொகுதியுடனும் இணைக்கப்பட்டன.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு மூன்றாவது தேர்தலாக தற்போதைய மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையிலும், மாவட்டத்தில் பிரசாரம் எவ்வித குறைவுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
விஐபிக்கள் வருகை: செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன்  பிரசாரம் ஓய்வடையும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம், திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் ஆகிய விஐபிக்கள் பிரசாரத்துக்காக வந்து சென்றுள்ளனர்.
மாவட்டத்தில் பரவலாக காங்கிரஸ் வேட்பாளர்கள் சு. திருநாவுக்கரசர் (திருச்சி), செ. ஜோதிமணி (கரூர்), கார்த்தி ப. சிதம்பரம் (சிவகங்கை), பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), ஹெச். ராஜா (சிவகங்கை), தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன் (திருச்சி), அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை (கரூர்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி (ராமநாதபுரம்), அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான் (திருச்சி) உள்ளிட்டோரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர்.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தொகுதியின் தலைமையிடத்தில் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால், திங்கள்கிழமை மாலையே விடுபட்ட பகுதிகளில் திருநாவுக்கரசரும், சாருபாலா ஆர். தொண்டைமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். 
நோட்டாவுக்கான பிரசாரம்: 
இதற்கிடையே தொகுதியை மீட்பதற்காக மகாத்மா காந்தி பேரவை சார்பில் நோட்டாவில் வாக்களிக்கக் கோரும் பிரசாரங்களும் நடைபெற்றுள்ளன. அதேவேளையில், தற்போதைய அரசியல் சூழலில் நோட்டாவில் வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதையும் சில சமூக ஆர்வலர்கள் தனியே கட்செவி அஞ்சலில் ஒலிப்பதிவினை பரப்பியும் வருகின்றனர்.
 இதில் குறிப்பாக திருநாவுக்கரசர் முதல் நாள் தனது பிரசாரத்துக்கு வந்தபோது, தொகுதிக்காக தான் மேற்கொண்ட விவரங்களைப் பட்டியலிட்டு, அடுத்த தொகுதி சீரமைப்புக்குப் பிறகுதான் புதுக்கோட்டை தொகுதியை மீட்க முடியும் என்ற தகவலையும் சட்டரீதியாக தெளிவுபடுத்தியும் இருக்கிறார்.
பணம் பறிமுதல்: மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 25 லட்சம் ரொக்கப் பணம் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி 35 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com