முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
முதியவர் வயிற்றில் இருந்து 5 கிலோ கட்டி அகற்றம்
By DIN | Published On : 04th August 2019 03:34 AM | Last Updated : 04th August 2019 03:34 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது.
அறந்தாங்கி நெம்மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் உடையார் (70). இவர் வயிறு வீக்கம், வயிற்று வலியுடன் கடந்த ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்குப் பிறகு குடல்வால் பகுதியில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் லதா, மயக்கவியல் நிபுணர் சரவணன் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். 5 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. கட்டியின் பகுதிகள் புற்றுநோய் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது: குடல்வால் பகுதியில் 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றுவது சவாலான அறுவை சிகிச்சை. தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ. 2 லட்சம் வரை செலவாகும். இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டு இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.