Enable Javscript for better performance
கோயில் பிரச்னை : அறந்தாங்கி அருகே சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    அறந்தாங்கி அருகிலுள்ள ஆயிங்குடி கோயிலில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆயிங்குடி கிராமத்தில்  கருத்தபெரியான் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு  ஆண்டுதோறும்அன்னதானம் நடைபெறும்.
    நிகழாண்டுக்கான வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை ஒரு சமூகத்தினர் நடத்தினர்.  இதில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 3 பூசாரிகள் பங்கேற்று அன்னதானத்தில் சாப்பிட்டார்களாம்.
     இதைத் தொடர்ந்து  விழா நடத்திய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அவர்கள் மூவரிடமும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனிடையே பூசாரிகள் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயங்களுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    மேலும் வேறு சமூகத்தினர் தங்களைத் தாக்கியதாக இளைஞர்கள் கூறிய வாக்குமூலம் அடிப்படையில், வியாழக்கிழமை இரவு அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர்  சி.கோகிலா தலைமையிலான  போலீஸார், விழா நடத்திய சமூகத்தைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து அறந்தாங்கி  காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
    இதை கேள்விப்பட்ட  விழா நடத்திய சமூகத்தினர் அவர்களுக்குள்ளாகத் தாக்கி மோதிக் கொண்ட  நிலையில்,  தாக்குதல் நடத்தாத தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்துச்சென்ற காவலர்களை கண்டித்து அறந்தாங்கி- பேராவூரணி சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், கோட்டாட்சியர் குணசேகர் மற்றும் வட்டாட்சியர் பா.சூரியபிரபு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களைப் பிடித்துச் சென்ற அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று கூறினர்.  அதன் பின்னர் அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்கு  ஓரு தரப்பினர் வரவில்லை. இதையடுத்து தாங்கள் விசாரணைக்காக அழைத்து வந்த 5 பேரையும் அறந்தாங்கி போலீஸார் விடுவித்தனர். இதன் காரணமாக இந்தப் பகுதியில் பதற்றம்ஏற்பட்டுள்ளது கிராமத்தில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai