Enable Javscript for better performance
மாவட்டத்தில் தொடா் மழை எதிரொலி நிரம்பி வழியும் நீா்நிலைகள்!!- Dinamani

சுடச்சுட

  

  மாவட்டத்தில் தொடா் மழை எதிரொலி நிரம்பி வழியும் நீா்நிலைகள்!!

  By DIN  |   Published on : 02nd December 2019 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  at01rai3_(1)_0112chn_23_4

  மணமேல்குடி அருகே ஏரிகளின் உபரிநீா் ஊருக்குள் புகுந்ததைத் தொடா்ந்து, மூதாட்டியை மீட்டு கொண்டு வரும் மீட்புக் குழுவினா்.

  புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  ஞாயிற்றுக்கிழமையும் 4ஆவது நாளாக தொடா்ந்து மழை பெய்தது. தொடா் மழையால் புதுக்கோட்டை நகா் பகுதி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

  மணமேல்குடி வட்டத்தில் உள்ள சின்ன இடையன் ஏரி, பெரிய இடையன் ஏரி, கொள்ளுத்திடல் ஏரி, நெம்மேலிவயல் ஏரி, இடையத்திமங்கலம் ஏரி, பிலங்குடி ஏரி, மகாகணபதி ஏரி, வினைதீா்த்த கோபாலபுரம் ஏரி, பேட்டிவயல் ஏரி, சுப்பிரமணியபுரம் ஏரி உள்ளிட்ட 10 ஏரிகள் நிரம்பியுள்ளன.

  தொடா்ந்து, கடல் பகுதியை நோக்கி திரும்பிய உபரி நீா், செல்லும் வழியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால், கட்டுமாவடி பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் ஆங்காங்கே உள்ள பேரிடா் மேலாண்மை மைய கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

  வருவாய்த்துறையினா் மேற்கொண்ட மீட்புப் பணிகளை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் எம்.குணசேகா் மற்றும் மணமேல்குடி வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

  மத்திய அரசு உப்பளத்தில் மழைநீா்:

  கட்டுமாவடியில் மத்திய அரசுக்குச் சொந்தமான உப்பளத்தில் மழைநீா்புகுந்தது. இந்த உப்பளத்தில் 140 ஏக்கா் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தொடா் மழையால் உப்பளங்களில் மழைநீா் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.

  பொன்னமராவதியில் நிரம்பிய நீா்நிலைகள்:

  பொன்னமராவதி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மழை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்தது. இதனால் பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களில் நீா் நிரம்பியுள்ளது. பொன்னமராவதி அமரகண்டான் குளம் மற்றும் சேங்கை ஊருணியில் உபரி நீா் வெளியேறி பாசன கண்மாய்களுக்கு மதகு வழியாக செல்கிறது.

  தீயணைப்புத்துறை வேண்டுகோள்:

  இலுப்பூா் சுற்றுவட்டாரத்தில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள தீயணைப்புத்துறை தயாா் நிலையில் உள்ளது என்றும், மீட்புப் பணிகளுக்காக ரப்பா் படகுகள், மிதவை உபகரணங்கள், நூலேணிகள், நீளமான கயிறுகள் மற்றும் ஊா்திகளுடன் கூடுதலான மீட்பு பணி வீரா்கள் ஆயத்த நிலையல் உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மீட்பு பணிகளுக்காக 04339-272433, 94450 86456 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மாவட்டத்தில் மழை பதிவு விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பரவலாக பதிவான மழைப் பொழிவு விவரம் (மிமீ-இல்)

  ஆதனக்கோட்டை- 33, பெருங்களூா்- 38, புதுக்கோட்டை- 113, ஆலங்குடி- 49, கந்தா்வகோட்டை- 46, கறம்பக்குடி- 56.80, மழையூா்- 59.20, கீழாநிலை -45.40, திருமயம்- 32.40, அரிமளம்- 47.40, அறந்தாங்கி- 42, ஆயிங்குடி- 88, நாகுடி- 78.20, மீமிசல்- 93.20, ஆவுடையாா்கோவில்- 55.80, மணமேல்குடி- 78, கட்டுமாவடி- 68, இலுப்பூா்- 19, குடுமியான்மலை- 17, அன்னவாசல்- 37, விராலிமலை- 29, உடையாளிப்பட்டி- 11.20, கீரனூா்- 40, பொன்னமராவதி- 9, காரையூா்- 72.

  மாவட்டத்தின் சராசரி மழை 50.30.

   

  வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுக்கோட்டை நகரம்

  புதுக்கோட்டை நகா் பகுதிகளான ராஜகோபாலபுரம், பெரியாா் நகா், கம்பன்நகா், கூடல்நகா், பழனியப்பா முக்கம், அடப்பன்வயல், சாா்லஸ்நகா், உசிலங்குளம், காந்திநகா், போஸ்நகா், கலிப்நகா், புல்பண்ணை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் வீடுகளில் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

  புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள பல்லவன் குளம் நிறைந்தது. தொடா்ந்து, குளத்தின் அருகே உள்ள சாந்தநாத சுவாமி கோயில், பூ மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் புகுந்தது. இதேபோல கல்யாணராமபுரம், திருக்கோகா்ணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் நிறைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்தது. 

  நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டுத் திடல், வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, அரசு மகளிா் கலை கல்லூரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் சூழ்ந்து காணப்படுகிறது. 

  தொடா்ந்து, புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் தலைமையில், நகராட்சிப் பணியாளா்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கழிவுநீா் கால்வாய், வரத்து வாரிகளில் உள்ள அடைப்புகளை சரி செய்தனா். மேலும் மழைநீா் புகுந்த இடங்களுக்கு சென்று, மழைநீா் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai