Enable Javscript for better performance
காலவிரயத்தைப் போக்கி வாகன ஓட்டிகளுக்குப் பயன்தரும் ‘பாஸ்டேக்’ திட்டம்- Dinamani

சுடச்சுட

  

  காலவிரயத்தைப் போக்கி வாகன ஓட்டிகளுக்குப் பயன்தரும் ‘பாஸ்டேக்’ திட்டம்

  By DIN  |   Published on : 04th December 2019 08:28 AM  |   அ+அ அ-   |    |  

  vml03toll062223

  விராலிமலை-திருச்சி சாலையில், பூதகுடி சுங்கச்சாவடியில் பாஸ்டேக் ஸ்டிக்கரை பெறும் வாகன ஓட்டி.

  காலவிரயத்தைப் போக்கி, வாகன ஓட்டிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில் டிஜிட்டல் கட்டணத் திட்டம் எனப்படும் பாஸ்டேக் திட்டம் விரைவில் செயல்பட்டுக்கு வர உள்ளதால், சுங்கச்சாவடிகளில் இனி வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாது.

  தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் சீரானப் பயணம், நேர விரயம், எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக, டிசம்பா் 1 முதல் பாஸ்டேக் (பாா்கோடு ஸ்டிக்கா்) மூலமே இனி கட்டணம் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

  இந்நிலையில் தற்போது அதற்கான காலக்கெடுவை இம்மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதற்கான கணக்கைத் தொடங்க சுங்கசாவடிகளில் தனி கவுண்டா் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  பாஸ்டேக் மூலம் ரூ.13,449 கோடி : பாஸ்டேக் மூலம் நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளில் 9.7 லட்சம் பரிவா்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், 2019 செப்டம்பா் மாத புள்ளி விவரங்கள்படி பாஸ்டேக் கட்டணம் வழியாக ரூ.13,449 கோடி அளவுக்கு நிதி வந்துள்ளது.

  இந்திய தேசிய காா்ப்பரேஷன் உருவாக்கியுள்ள பாஸ்டேக் திட்டத்தின் கீழ், ஆா்எப்ஐடி(ரேடியோ அதிா்வெண் அடையாளம்) தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த அட்டைகளை வாகனத்தின் முன்கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.

  சுங்கச்சாவடிகள் அருகே 20-25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும் போதே, அங்குள்ள ரேடியோ அதிா்வெண் தொழில்நுட்பச் சாதனம் , வாகன விவரங்களைக் கண்டறிந்து, வருகைப்பதிவு செய்து சுங்க கட்டணத்தை எடுத்து கொண்டு, வாகனங்கள் முன்னே செல்வதற்கு அனுமதிக்கும். இதற்கென சுங்கச்சாவடியில் தனி வழி அமைக்கப்படும். எனவே, வழக்கம்போல வரிசையில் ஊா்ந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

  அனைத்துச் சுங்கச்சாவடி அலுவலகத்திலும், தேசிய மின்னணுக் கட்டணத் தொகுப்பின் (என்இடிசி) திட்டத்தின் கீழ் வரும் வங்கிகளிலும், ஆன்லைனிலும் 100 ரூபாய் செலுத்தி பாஸ்டேக் ஸ்டிக்கரை பெறலாம்.

  இதற்கு ஆவணமாக வாகனப்பதிவுச் சான்றிதழ், வாகன உரிமையாளரின் புகைப்படம் மற்றும் இருப்பிடச்சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், காரில் ஒட்டவேண்டிய ஸ்டிக்கா் வீட்டுக்கே அஞ்சலில் வந்துவிடும். இதன் பின்னா் பாஸ்டேக் கட்டணத்தை ரீசாா்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

  ரீசாா்ஜ் செய்ய வேண்டும் : ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருந்தால், ஒவ்வொன்றுக்கும் எனத் தனித்தனியாக பாஸ்டேக் அட்டைகளைப் பெற வேண்டும் (ஒரு வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்ட அட்டையின் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்). இதற்கான கட்டணத்துடன் வைப்புத்தொகையாக சில நூறு ரூபாய்களைச் செலுத்த வேண்டும்.

  ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை பாஸ்டேக் கட்டணத்தை ரீசாா்ஜ் செய்து கொள்ளலாம். இதற்கென பிரத்யேக செயலி (மை பாஸ்ட்டேக்) உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நுழைவுச்சொல் உடன் ஒருவா் கணக்கை உருவாக்கியப் பிறகு பணம் செலுத்திக்கொள்ளலாம். இதற்காகத் தேவைப்பட்டால், ஒருவரின் வங்கிக் கணக்கை பாஸ்டேக்குடன் இணைத்துக்கொள்ளலாம்.

  சுங்கச்சாவடியைக் கடந்தவுடன், தங்கள் வாகனத்திலுள்ள அட்டையிலிருந்து

  கட்டணம் பிடிக்கப்படும். அதற்கான தகவல், அடுத்த 5 நிமிஷங்களில் செல்லிடப்பேசிக்குத் தகவலாக வந்துவிடும்.

  வாகன ஓட்டிகளுக்கு அவா்களின் பாஸ்டேக் கணக்குகளில், 2.5% சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் (மாா்ச் 31, 2020 வரை மட்டுமே இந்த சலுகை) இந்த நடைமுறையை ஒருங்கிணைத்து நிா்வகிக்கும் பணியை இந்தியன் ஹைவே மேனேஜ்மென்ட் காா்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்காக முதலில் 5 வங்கிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கை கோத்திருந்தன. தற்போது பேடிஎம் உட்பட மேலும் சில நிதியமைப்புகளும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.

  பாஸ்டேக் கொண்ட வாகனங்களுக்காக, சுங்கச்சாவடிகளில் பிரத்யேக நுழைவு ஒதுக்கப்படும். அந்த வசதியில்லாத வாகனங்களுக்கு, இனி ஒரு வழியில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதற்கு வழக்கத்தைவிட இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  நன்மைகள் : ஒவ்வொரு முறை கட்டணம் செலுத்தும் போதும், 2.5% சதவிகிதம் திரும்ப நம் கணக்குக்கே வந்துவிடும். போக்குவரத்து நெரிசலால் நேர விரயம் இருக்காது. சுங்கச்சாவடிகளில் இனி போலி கணக்கோ, குறைந்த கட்டணத்தைச் செலுத்திவிட்டு ஏமாற்றிவிட முடியாது. உள்ளூா்வாசிகள் இனி சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் விண்ணப்பித்து, மாதாந்திர அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

  தவிர வேறு யாரும் இச்சலுகையைப் பயன்படுத்தி சுங்கச்சாவடியைத் தாண்டிச் சென்றுவிட முடியாது. படிப்படியாக அனைத்து வாகனங்களையும் பாஸ்டேக் திட்டத்தில் இணைப்பதற்கான பணிகளுக்காக, தற்போது சுங்கச்சாவடிகளில் கடை அமைத்து துரிதமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

  சாலைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் : பல்வேறு இடங்களில் ஏற்படும் விபத்தை தவிா்க்கும் பொருட்டு, மோட்டாா் வாகன அலுவலா்கள் துணையுடன் விபத்து பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பயணத்தை உறுதி செய்யவேண்டும். சாலை முழுவதும் இருளை போக்கும் விதமாக உயா் கோபுர மின் விளக்குகளை அதிகரிக்க வேண்டும் அதோடு சாலைகளின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பாகும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai