சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள வெள்ளாற்றில் மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
  புதுக்கோட்டை, கோவில்கோட்டையைச் சேர்ந்த ஆதிமூலம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: 
   அறந்தாங்கி வெள்ளாற்று நீர் மூலம், ஆற்றைச் சுற்றியுள்ள 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில் இந்த ஆற்றுப் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக  லாரிகளில் மணல் எடுத்து வருகின்றனர். இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
   இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
  எனவே, வெள்ளாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்கவும், மணல் அள்ளுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
   இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், வெள்ளாற்றில் மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai