புதுகையில் புத்தகத் திருவிழா: இலக்கிய விருதுகள் அறிவிப்பு: இன்று விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை 3 ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை 3 ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவின் வரவேற்புக் குழுத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் நா. முத்துநிலவன், செயலர் அ. மணவாளன்  ஆகியோர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வரும் பிப். 15 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும்  புத்தகத் திருவிழாவையொட்டி புதன்கிழமை (பிப். 13) கலை, இலக்கியவாதிகள், மாணவர்கள் பங்கேற்கும் புத்தகப் பேரணி நடைபெறுகிறது. புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர்மன்றத்தில் நிறைவடைகிறது. 
இலக்கிய விருதுகள்:
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 2017-இல் வெளிவந்த சிறந்த புத்தகங்களுக்கான விருதுகளை கவிஞர் ராசி. பன்னீர்செல்வன் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 
மரபுக் கவிதையில் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய "ஏர்வாடியார் கவிதைகள்',  புதுக்கவிதையில் ஸ்ரீதர் பாரதி எழுதிய "கருப்பு வெள்ளை கல்வெட்டு', ஹைக்கூ கவிதையில் பிருந்தா சாரதி எழுதிய "மீன்கள் உறங்கும் குளம்', சிறுகதையில் செம்பை முருகானந்தம் எழுதிய "போன்சாய் நிழல்கள்', மொழிபெயர்ப்புக் கட்டுரையில்  ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதி ச.வீரமணி தமிழில் மொழிபெயர்த்த "குஜராத் திரைக்குப் பின்னே',  மொழிபெயர்ப்புக்கான நாவலுக்கு எம்மனுயில் கஸகேவிச் எழுதி கே.சுப்பிரமணியம் தமிழில் மொழிபெயர்த்த "விடிவெள்ளி' ஆகிய நூல்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
குழந்தை இலக்கிய நூலில் மு.முருகேஷ் எழுதிய "அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' உள்ளிட்ட பல்வேறு நூல்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த குறும்படமாக ஆர்.எம்.கார்த்தி இயக்கிய "தொலைத்தொடர்பு' என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதுபெறும் ஒவ்வொரு நூலுக்கும் விருதுப் பட்டயத்துடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
வரும் பிப்.21 அன்று பாடலாசிரியர் அறிவுமதி சிறந்த திரைப்படம் மற்றும் குறும்படத்துக்கான விருதையும், பிப். 22 அன்று சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் இலக்கிய விருதுகளையும் வழங்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com