அறிவியல் தேடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்
By DIN | Published On : 20th February 2019 08:59 AM | Last Updated : 20th February 2019 08:59 AM | அ+அ அ- |

மாணவ, மாணவிகள் அறிவியல் தேடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த அறிவியல் தேடல் படைப்பாற்றலை அதிகரிக்கும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. வனஜா.
புதுதில்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு மாநில அறிவியல் இயக்கம் சார்பில், புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலானஅறிவியல் புத்தாக்கக் கண்காட்சியைத் தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
மாணவ, மாணவிகள் அறிவியல் தேடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நம்முடைய படைப்பாற்றலை அதிகரிக்கும். கண்டுபிடிப்புகளை அதிகம் கொடுக்கும். அந்தக் கண்டுபிடிப்புகள் சமூகத்துக்கானதாகவும், சமூகத்தை மேம்படுத்துவற்கானதாகவும் அமைய வேண்டும் என்றார் வனஜா.
மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட நிதியுதவியைக் கொண்டு, 74 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அறிவியல் மாதிரிகளைத் தயாரித்து கண்காட்சியில் இடம் பெறச் செய்திருந்தனர்.
இவற்றிலிருந்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவைகள் தேர்வு செய்யப்பட்டன. மேலப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர் கு. கணேசனின் படைப்பு முதலிடத்தையும், குருந்திராக்கோட்டை நடுநிலைப் பள்ளி மாணவி ஷர்மி, வாராப்பூர் உயர்நிலைப் பள்ளி மாணவன் சரவணனின் படைப்பு இரண்டாம் இடத்தையும் பெற்றன.
கொத்தக்கோட்டை உயர்நிலைப் பள்ளி பெரியநாயகி, காட்டுநாவல் நடுநிலைப் பள்ளி அம்பிகா, குருந்திராக்கோட்டை நடுநிலைப் பள்ளி கார்த்திகா ஆகியோரின் படைப்புகள் மூன்றாமிடத்தையும் பிடித்தன.
இம்மூன்று இடங்களையும் பிடித்த 6 படைப்புகள் மாநில அளவில் நடைபெறவுள்ள கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. திருச்சி அண்ணா அறிவியல் மையத்தின் ஆர். செந்தில்முருகன், தேசிய கண்டுபிடிப்பு மையத்தின் கிரீஸ் மேத்யூ ஆகியோர் படைப்புகளைப் பார்வையிட்டு தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ரெ. ஜீவானந்தம், இரா. கபிலன் ஆகியோர் செய்திருந்தனர்.முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். ஏராளமான மாணவ, மாணவிகள் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டனர்.