முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
அன்னவாசல் பகுதிகளில் புகையிலை பொருள்கள் அழிப்பு
By DIN | Published On : 28th February 2019 10:39 AM | Last Updated : 28th February 2019 10:39 AM | அ+அ அ- |

புதுக்கோ ட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கண்டறிந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.
தமிழகத்தில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்னவாசல் பகுதியில் பெட்டிக் கடை, மளிகைக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டுவருவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பரணிதரன்,அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கலையரசன் ஆகியோர் சோதனை நடத்த அதிகாரிகளை அறிவுறுத்தினர்.
இதன்பேரில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, மலைச்சாமி, அருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர கடந்த 2 தினங்களாக சோதனையில் ஈடுபட்டனர். அன்னவாசல் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், கடை வீதி ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைக் கண்டறிந்த அதிகாரிகள், பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதத்தையும் விதித்தனர்.அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.