புதுகை அரசு மருத்துவக் கல்லூரியில் 10 நாள்கள் கண்காட்சி தொடக்கம்
By DIN | Published On : 28th February 2019 10:38 AM | Last Updated : 28th February 2019 10:38 AM | அ+அ அ- |

புதுக்கோ ட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 நாள்கள் மருத்துவக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
மாநிலத்திலேயே முதல் முறையாக நடத்தப்படும் இந்த மருத்துவக் கண்காட்சியை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறியது:
பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியின் மீதான ஆர்வத்தை உருவாக்குவதற்காக மாநிலத்திலேயே முதல் முறையாக இந்தக் கண்காட்சி 10 நாள்களுக்கு நடத்தப்படுகிறது. ஏறத்தாழ 25 ஆயிரம் மாணவர்களை இந்தக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனைத்து வகையான உயர்தர சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் ரூ. 75 கோடியில் சிறுநீரக ஒப்புயர்வு மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாநிலத்திலேயே சிறந்த அரசு மருத்துவமனையாக புதுக்கோ ட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளங்கும் என்றார் விஜயபாஸ்கர்.
இந்தக் கண்காட்சியில் மருத்துவத் துறை சார்ந்த அனைத்து அறுவைச் சிகிச்சை அரங்குகளும், அவற்றில் மேற்கொள்ளப்படும் அரிய அறுவைச் சிகிச்சை மாதிரிகளும், பதப்படுத்தப்பட்ட உடல்களும் என 26 வகையான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடக்க விழாவில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ இயக்குநர் சு. கணேஷ், மத்தியத் தொலைத்தொடர்பு ஆலோசனைகுழு உறுப்பினர் க.பாஸ்கர் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள அரசு ராணியார் மருத்துவமனையையும், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவ வசதிகள் குறித்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோரும் பார்வையிட்டனர்.