Enable Javscript for better performance
கடன் தள்ளுபடி வதந்தி: புதுகை ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்த மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    கடன் தள்ளுபடி வதந்தி: புதுகை ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்த மக்கள்

    By DIN  |   Published on : 08th January 2019 08:36 AM  |   அ+அ அ-   |    |  

    புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிக் கடன்களும்  தள்ளுபடி செய்யப்படும் என்ற தவறான வதந்தியால் ஆயிரக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகத்தில்  திங்கள்கிழமை குவிந்ததால் போக்குவரத்து முடங்கியது. 
    கடந்த நவம்பர் மாதம் கோரத்தாண்டவமாடிய கஜா புயலால் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்களில் பொதுமக்களின் கோரிக்கையின் பேரில்,  கடன் தவணையைக் கேட்டு நெருக்கடி தரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வருவாய்த் துறையின் சேத மதிப்பீட்டு அறிக்கையை வங்கிகளில் அளித்து சலுகை பெற கேட்டுக் கொள்ளப்பட்டது.  இந்நிலையில், திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு காலை 9 மணிமுதலே மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது.  விசாரணையில், கடன் தள்ளுபடி கோரி முதல்வருக்கு அளிக்கும் படியான மனுக்களுடன் மக்கள் வருவது கண்டறியப்பட்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் குவியத் தொடங்கியவுடன், ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வாகனங்கள் தடுக்கப்பட்டன. மேலும்,  ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தும் வளாக நுழைவிலேயே (போர்ட்டிகோ) மனுதாரர்களிடம் வருவாய்த் துறை அலுவலர்கள்  மனுக்கள் பெற்றனர். ஏறத்தாழ பிற்பகல் 3 மணி வரை இந்தக் கூட்டம் நீடித்தது. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. 
    வதந்""தீ''! - கடன் தள்ளுபடி என்பது முழுமையான வதந்தி. அப்படியான முயற்சிகள் எதுவும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை; விண்ணப்பங்கள் கோரவும் இல்லை என வருவாய்த் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
    திருவிழா கூட்டம் போல...
    ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையான பிஎல்ஏ ரவுண்டானா முதல் அருங்காட்சியகம் வரை பெரு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  சாலையோரங்களில் மக்கள் நடந்து சென்று திரும்பியதால் திருவிழா போல காட்சியளித்தது. 
    நகலெடுக்கும் (ஜெராக்ஸ்) கடைகளில் பெருங்கூட்டம் முண்டியடித்து விண்ணப்பங்களை வாங்கியது. வழக்கமான கோரிக்கை மனுவைப் போன்ற சாதாரண நகல் ரூ. 5 முதல் ரூ. 50 வரை விற்பனையானது. மனு அளிக்க வந்திருந்தோர் அனைத்து ஆவணங்களுடன் வந்திருந்தனர்.  மாநாடு போல், ஆட்சியரகத்துக்கு வாகனங்களில் கிராமப்புற மக்கள் வந்ததைக் காண முடிந்தது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp