சுடச்சுட

  

  பூப்படைந்த சிறுமிகளைப் பச்சை ஓலைக்குள் தனித்திருக்கச் செய்யும் வழக்கம் இன்றும் உண்டா என்ன?!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 12th January 2019 02:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yellow_festival

   

  தமிழ்ச்சமுதாயத்தில் இப்படி ஒரு வழக்கம் தொன்று தொட்டு பேணப்பட்டு வந்திருக்கிறது. இன்றைக்கு மெத்தப்படித்த குடும்பங்களிலும், குறைந்தபட்சக் கல்வியறிவாவது பெற்றிருக்கக் கூடிய குடும்பங்களிலும் இதன் கடுமை சற்று தகர்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இன்னும் கிராமப்புறங்களில் இது முற்றிலுமாக புழக்கத்தில் இல்லையென்றாகவில்லை. 

  பெண் குழந்தைகள் 11 லிருந்து 13 அல்லது 14 வயதிற்குள் பூப்படைவது இயல்பான ஆரோக்யமென்று கருதப்படுகிறது. அப்படி பூப்படையும் சிறுமிகளை வீட்டில் ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து தனித்து அமர வைத்து வெல்லம் தட்டிப் போட்டு நல்லெண்ணெய் விரவிச் செய்த உளுத்தங்களி உண்ணத்தருவார்கள். தாய்மாமன் வரும் வரை ஆடை மாற்றுவதில்லை. அந்தியில் ஊரழைத்து தாய்மாமன் கையால் தலைக்குத் தண்ணீர் விட்டு மாமன்சீர் உடுத்தி அவர் கையால் கட்டப்பட்ட பச்சை ஓலைக் கிடுகுத் தட்டிக்குள் மறைத்து உட்கார வைக்கப்படுவார்கள். இது கடுமையாகப் பின்பற்றப்பட்ட காலமென்றால் அது பாரதிராஜா வின் மண்வாசனைக் காலமாக இருக்குமென்று தானே நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது பொய்.

  கட்டுரையைக் காணொளியாகக் காண...

   

  இன்றைக்கு நகரங்களில் இந்த வழக்கம் இல்லவே இல்லையென்றாகி விட்டது. சும்மா பெயருக்கு பூப்படைந்த சிறுமிகளை தனியே உட்கார வைப்பதாகப் பெயர் பண்ணிக்கொண்டு மூன்றாம் நாளே தலைக்குத் தண்ணீர் விட்டு வீட்டுக்கு அழைப்பதாகக் கூறி வரவேற்பறை மூலையில் அமர்ந்திருக்கும் சிறுமியை முழு வீட்டிற்குள்ளும் அழைத்துக் கொள்வார்கள் என்று தான் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

  ஆனால் சபரிமலை விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி இணைய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் அந்த நம்பிக்கையை பொய்த்துப் போகச் செய்வதாக இருக்கிறது.

  இன்றும்  கூட சிறுமிகள் பூப்படைதலை சிலர் இப்படித்தான் எதிர்கொள்கிறார்களா என்று சற்று அச்சமாகக்கூட இருக்கிறது.

  கஜா புயல் நிவாரணப்பணிக்காக நடிகை கஸ்தூரி தஞ்சைப் பகுதிக்குச் சென்ற போது அங்கு 13 வயதுச் சிறுமியொருத்தி இறந்த செய்தி கிடைத்திருக்கிறது. அந்தச் சிறுமி எப்படி இறந்தாள்? என்றால்... புயல் நேரமும் சிறுமி பூப்படைந்த நேரமும் ஒன்றாக அமைந்தது தான் அவளது உயிரைக் குடிக்கும் எமனாகி இருக்கிறது. பூப்படைந்த காரணத்தால் ஓலைக்குச்சு வீட்டில்... வீட்டை விட்டுத் தள்ளி வெளியே ஓரிடத்தில் சிறுமி தங்க வைக்கப்பட்டிருக்கிறாள்... துணைக்கு அவளது அம்மாவும் உடனிருந்த போதும் புயல் நேரத்துக் கலவரங்கள் அவளை மருள வைத்திருக்கின்றன. அப்போதும் கூட சம்பிரதாயம், சடங்கு என்ற பெயரில் சிறுமி அங்கேயே தங்க வைக்கப்பட்டிருக்கிறாள். அவளால் தனது சமூகம் தனக்கு விதித்த கட்டுப்பாடுகளை மீற முடியவில்லை. அவளது தாயார் மிகக்கடுமையாக அவள் அங்கே தான் இருந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் என்கிறார் நடிகை கஸ்தூரி.

  அதன்பலன் அச்சிறுமி வெகு சீக்கிரமே புயல் களேபரங்களால் பாதிக்கப்பட்டு மிக மோசமான உடல்நலக் கோளாறுகளுடன் மரணத்தைத் தழுவி இருக்கிறார். 

  நம்மில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது இப்படியான குருட்டுத் தனமான சம்பிரதாயங்களே தவிர சபரிமலைக்குள் இளம்வயதுப் பெண்கள் அத்துமீறி ஊடுருவ முயல்வதைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பது அல்ல என்கிறார் நடிகை கஸ்தூரி.

  இது நியாயமான வாதம் தானே!

  இன்றாவது பின் தங்கிய கிராமங்களிலும், ஊர்நாட்டுப்புறங்களிலும் மட்டுமே இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப் படலாம். ஆனால் 60, 70 களில் தென்னகக் கிராமங்களில் இது தவிர்க்க முடியாத கடுமையான சம்பிரதாயமாகக் கடைபிடிக்கப்பட்டதற்கு சாட்சியங்கள் பல உண்டு.

  பாட்டிமார்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 

  80 களிலாவது வீட்டுக்குள்ளே தனிக்குச்சு கட்டி அதில் சிறுமிகளை அவர்களது தாயார் அல்லது பிற வயதான பெண்மணிகளுடன் தனித்திருக்கச் செய்வார்கள் என்று.  ஆனால் 60 களில் அப்படியில்லை. ஊரை விட்டு வெளியே காட்டுக்குள் தனிக்குச்சு கட்டி ஏகாலி பாதுகாப்பில் சிறுமிகளை வயதான பெண்களுடன் தனித்திருக்கச் செய்யும் வழக்கம் கூட அப்போது இருந்திருக்கிறது என்கிறார்கள். அவர்கள் புழங்குவதற்குத் வட்டில், டம்ளர் உட்படத் தனிப்பாத்திரங்கள் தரப்படும். உடைகள் ஏகாலியிடமிருந்து இரவல் பெறப்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றிக் கட்ட அனுமதிக்கப்படும். சானிடரி நாப்கின்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு பழைய கிழிந்த புடவைகளும், காடாத்துணிகளும் தான் சானிடர் பேடுகளாகப் பயன்படுத்தத் தரப்பட்டன. அவற்றை ஒவ்வொரு முறையும் துவைத்து உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத நியதி.

  என் வகுப்புத்தோழி ராமலட்சுமிக்கு இரண்டு பாட்டிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் மாதவிடாய்க்குத் தனியாக சானிடரி நாப்கின்கள் மட்டுமல்ல தனியாக கிழிசல் துணி கூடக் கிடையாது என்பார்கள். இந்த இரண்டு பாட்டிகளும் கடுமையான உழைப்பாளிகள். அவர்கள் வயலுக்குச் சென்று உழைக்காத நாட்கள் என்பதே இல்லை. ஞாயிறு விடுமுறை கிடையாது, பொங்கல், தீபாவளி விடுமுறைகள் கூட எடுத்துக்கொள்ள விரும்பாத பிறவிகள் அவர்கள். அப்போதும் ஆளரவற்ற காட்டில் தன்னந்தனியே களைபறித்துக் கொண்டோ, கிணற்றுத் தண்ணீரை மடை மாற்றிக் கொண்டோ இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை எட்டுகெஜப்புடவையின் முந்தானை தான் சானிடரி நாப்கின். அப்படி இரண்டு புடவைகள் மட்டுமே வைத்திருப்பார்கள். அதையே மாற்றி மாற்றித் துவைத்து உலர்த்தி உடுத்துக் கொள்வார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ரத்தக்கறை படிந்த துணியை ஒருமுறை துவைத்து உலர்த்தினாலே அது கிட்டத்தட்ட சடசடவென கடினமானதாக மாறிவிடும். இதில் மீண்டும் மீண்டும் துவைத்து உலர்த்திய துணி என்றால் அது கிட்டத்தட்ட கூர்மையான பிளேடுக்கு இணையாக உறுத்தல் தரக்கூடும். அப்படியும் அந்தப் பெண்மணிகள் அதை சகித்துக் கொண்டு அதையே பயன்படுத்தி பல காலம் வாழ்ந்தார்கள். இவற்றுக்கு நடுவில் மாதா மாதாம் வீட்டு விலக்காகி நிற்கையில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டு இரவுகளில் நெல் அள்ளும் சாக்குகளை விரித்துப் படுப்பது, பெருச்சாளிகளும், கரப்பான்களும் ஒளிந்து விளையாடும் வீட்டின் இருட்டு மூலைகளை அந்த நாட்களுக்கே நாட்களுக்கென்று ஸ்பெஷலாக ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டு வாழ்வது. இப்படிப் பல சித்தரவதைகளை அனயாசமாகக் கடந்து வந்தார்கள். இருவருக்கும் உடல் வலுவும் மன வலுவும் அதிகமென்பதால் 80 வயது தாண்டி வாழ்ந்து மறைந்தார்கள்.

  இதில் குறிப்பிடத்தக்க விஷயம். இவர்களைப் போலவே எல்லாப் பெண்களுக்குமே பூப்படைதலும், வீட்டு விலக்கு நாட்களும் சர்வ சாதாரணமாகக் கடந்துவிடவில்லை அப்போது.

  போதுமான சுகாதார மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அந்நாட்களில் பல சிறுமிகள் பூப்படைந்து தனிக்குச்சில் விஷ ஜந்துக்களால் கடிபட்டு உயிராபத்தையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

  பலருக்கு சுகாதாரமற்ற வீட்டு விலக்குத் துணிகளின் பயன்பாடு காரணமாக கர்ப்பப்பை புற்றுநோய் தாக்கியிருக்கிறது. சொல்லப்போனால் அப்போதெல்லாம் அதை வெறும் வயிற்றுவலி என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார்கள். அது கருப்பை புற்றுநோயாக இருக்கக் கூடும் என்று பலருக்குத்தெரிந்திருக்கவில்லை. 

  பெண்ணுடலுக்கு எப்போது ஓய்வு தேவையோ இல்லையோ? எப்போது சுகாதாரம் தேவையோ இல்லையோ?! நிச்சயமாக அவர்கள் சுகாதாரமாகவும், முற்றிலும் ஓய்வுடனும் இருந்தாக வேண்டிய காலங்கள் எனச் சில உண்டு. அதில் முக்கியமானவை இவை. சிறுமிகள் பூப்படையும் போதும், அடுத்தடுத்து மாத விடாய் காலங்களிலும் அவர்களுக்கு பூரண ஓய்வும், சுகாதாரமும் நிச்சயம் தேவை. இதை முதலில் குடும்பத்தினர் உணர்ந்திருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் வேண்டி விரும்பி நம் வீட்டுப் பெண்களை நாமே மன உளைச்சலில் தள்ளியவர்கள் ஆவோம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai