மெய்வழிச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பொங்கல் விழா!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மெய்வழிச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மக்கள் பொங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மெய்வழிச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மக்கள் பொங்கல் மற்றும் மகிழ்ச்சிப் பொங்கல் ஆகியன செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றன.
சாதி, மதப் பேதமின்றி மெய் மதத்தைப் பிரதானமாகக் கொண்டு  நூற்றுக்கணக்கானோர் ஓலைக்குடிசைகளில் வாழ்ந்து வரும் மெய்வழிச்சாலை-புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
1942இல் 100 ஏக்கரில் தொடங்கப்பட்ட மெய்வழிச்சாலையில் சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்வதவம், புத்தம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து மறலி கை தீண்டா சாலை ஆண்டவர்கள் என்ற மெய் மதத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். 
இவர்களின் வழி வந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் மாநிலம் முழுவதும் வெள்ளைத் தலைப்பாகையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் இங்கு பொங்கல் பெருவிழா மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது வழக்கமான போகிப் பண்டிகையன்று இந்த மெய்வழிச்சாலை மக்கள் திரளுகிறார்கள். 
வழக்கமான பொங்கல் விழாவை மகிழ்ச்சிப் பொங்கலென்றும், அடுத்த நாளின் மாட்டுப் பொங்கலை செல்வப் பொங்கலென்றும் இம்மக்கள் கொண்டாடுகின்றனர்.
நிகழாண்டும் கொடிமரத்தைச் சுற்றிலும் பள்ளம் தோண்டி சுற்றிலும் வண்ணக் கோலங்களை இட்டு பொங்கல் விழாவை திங்கள்கிழமை தொடங்கினர். இதற்காக மாநிலம் முழுதுமிருந்தும் சுமார் 10 ஆயிரம் பேர் வந்ததாக மெய்வழிச்சாலை நிர்வாகிகள் தெரிவித்தனர். இவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த மெய்வழிச்சாலையினரும் அடக்கம். இங்குள்ள பொன்னரங்க தேவாலயத்தைச் சுற்றிலும் கரும்பு, மாவிலைத் தோரணங்கள், தென்னங்குருத்து, இளநீர்க் கொத்துகளால் அலங்கரித்தனர். 
ஆண்டவர்களின் திருக்குமாரர் சபைக்கரசர் வர்க்கவான் தலைமையில் வழிபாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வந்திருந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து விழாவைத் தொடங்கினர்.
அடுத்த நாள் புதன்கிழமை மாலை கும்மி, கோலாட்டத்துடன் செல்வப் பொங்கல் நடைபெற்றது. இதிலும் வந்திருந்த அத்தனை மெய்வழிச்சாலைக் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.தங்களது கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு இரவு அனைவரும் தங்களது ஊர்களுக்குத் திரும்பினர். 
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டின்படி மெய்வழிச்சாலையில் இணைந்துள்ளவர்களில் ஒருவருக்கொருவர்  எந்தச் சாதி, எந்த மதம் என்றும் தெரியாது, ஆனால் அனைவரும் ஒன்றாகக் கூடிக் கொண்டாடும் திருவிழாவாக பொங்கல் விழா நடத்துகிறோம் என்கின்றனர் பொங்கலைக் கொண்டாடிய வந்த மெய்வழிச்சாலையினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com