நிவாரணம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்னா 

புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சன்விடுதி ஊராட்சிக்குட்பட்ட மழவராயன்பட்டியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயலால் இப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ளனர். 
ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டி அரசு நிவாரணப் பொருள்கள், நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கேட்டும் உரிய பதில் இல்லையாம். 
இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு நிவாரணப் பொருள்கள், நிவாரணத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து,  வருவாய்த்துறையினர் அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே அரசு நிவாரணப் பொருள்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.  
கந்தர்வகோட்டை வட்டம், குளத்தூர்நாயக்கர்பட்டியைச் சார்ந்த கிராம மக்கள் புயலால்  பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை எனக்கூறி, 150-க்கும் மேற்பட்டோர் குளத்தூர்நாயக்கர்பட்டி பேருந்துநிறுத்தம் அருகே கறம்பக்குடி - தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com