நாட்டு துப்பாக்கி வெடித்து தாய், மகன் காயம்
By DIN | Published On : 08th July 2019 07:57 AM | Last Updated : 08th July 2019 07:57 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை விளையாட்டாக நாட்டு துப்பாக்கியை கையாண்டபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் தாய், மகன் இருவர் காயமடைந்தனர்.
இலுப்பூர் மேலப்பட்டியில் வசித்து வரும் செல்லக்கண்ணு (49), அரசு உரிமம் பெற்று நாட்டு துப்பாக்கி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இரு நாள்களுக்கு முன்பு துப்பாக்கியை அவர் லோடு செய்து வைத்ததாக தெரிகிறது.
இந்நிலையில், எதிர்வீட்டில் வசிக்கும் விஜயக்குமார் மனைவி நீலா (26), தனது மகன் அஜீத்துடன் (3) செல்லக்கண்ணு வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அவரது மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் ஓடியாடிய அஜீத்திடம், செல்லக்கண்ணுவின் மகன் தேவசேனாதிபதி (15) துப்பாக்கியை காட்டி விளையாட்டுத்தனமாக மிரட்டியுள்ளான். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி ட்ரிகரில் தேவசேனாதிபதி கை பட்டு வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில் அஜீத் மற்றும் அவரது தாய் நீலா இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் சிகாமணி, காவல் ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் செல்லக்கண்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.