பச்சிளம் குழந்தையின் வயிற்றில் இரு அறுவைச் சிகிச்சைகள்: புதுகை அரசு மருத்துவர்கள் சாதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த மூன்றாவது நாளில் பச்சிளம் குழந்தையின்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த மூன்றாவது நாளில் பச்சிளம் குழந்தையின் வயிற்றில் ஓர் அறுவைச் சிகிச்சையும் ,அதன் தொடர்ச்சியாக 10 நாள்களுக்குப்  பிறகு மற்றொரு அறுவைச் சிகிச்சையும் மேற்கொண்டு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள அரசம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் - வினிதா தம்பதிக்கு கடந்த ஜூன் மூன்றாம் வாரத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் வயிறு சற்றே வீங்கியிருப்பதைக் கண்ட மருத்துவர்கள் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது, வயிற்றில் சிறுகுடல் 10 செ.மீ அளவுக்கு போதிய வளர்ச்சியில்லாமல் இருந்ததையும், அதனால் சிறுகுடலின் ஒரு பகுதி வீங்கியும், மறுபகுதி மெலிந்தும் காணப்பட்டது தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக விரைவாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில், மயக்க மருத்துவர்கள் ரவிக்குமார், கணேசன், ரவீந்திரன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மெலிந்த மற்றும் வீங்கிய சிறுகுடல் பகுதிகள் வயிற்றுக்கு வெளியே வைக்கப்பட்டன. இரு துவாரங்கள் இக்குடல் பகுதியில் போடப்பட்டு 10 நாள்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சிகிச்சையின் முடிவில் வீங்கிய சிறுகுடல் பகுதி சற்றே வற்றியும், மெலிந்த சிறுகுடல் பகுதி சற்றே வளர்ந்தும் காணப்பட்டது. 
இதைத் தொடர்ந்து குழந்தை பிறந்த 13-ஆவது நாளில் மீண்டும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வயிற்றுக்கு வெளியே வைக்கப்பட்ட சிறுகுடல் பகுதி வயிற்றுக்கு உள்ளே இயல்பான இடத்திலேயே பொருத்தப்பட்டது. 
இந்த அறுவைச் சிகிச்சை குறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது: கருவில் குழந்தை இருக்கும்போதே ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் பகுதிகளில் வளர்ச்சி குன்றிவிடும். அவ்வாறான நிலையில்தான் இந்தப் பெண் குழந்தையும் இருந்தது. அரசு மருத்துவமனையில் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவது அரிதான ஒன்று.
தனியார் மருத்துவமனைகளில் பல லட்ச ரூபாய்கள் செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது என்றார் மீனாட்சிசுந்தரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com