போக்குவரத்துக் கழக நிதிப் பற்றாக்குறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 13th July 2019 07:38 AM | Last Updated : 13th July 2019 07:38 AM | அ+அ அ- |

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை தமிழக அரசு ஈடு செய்யும் வகையில் அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலர் எம். வேலுசாமி தலைமை வகித்தார். சிஐடியு தொழிற்சங்கப் பொதுச் செயலர் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி தொழிற்சங்கப் பொதுச் செயலர் பி. சக்திவேல், டிடிஎஸ்எப் சங்கத்தின் பொதுச் செயலர் எச். ராஜசேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைப் போக்கிட, தமிழக அரசு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஈடு செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் சேமிப்புத் தொகையான ரூ. 8500 கோடியை தொழிலாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.