ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 24th July 2019 09:27 AM | Last Updated : 24th July 2019 09:27 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட் ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, காவிரிப் படுகைப் பாதுகாப்புக் கூட்டியக்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரியில் நடுவர் மன்றத் தீர்ப்பின்படி 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். நெடுவாசலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ். குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பி. டில்லிபாபு ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு. மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ். சங்கர், நெடுவாசல் போராட்டக் குழுத் தலைவர் கி. தட்சிணாமூர்த்தி, விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் எஸ். பொன்னுசாமி, எஸ்.சி. சோமையா, ஏ. ராமையா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.
முன்னதாக பேரணியாக வந்து ஆட்சியரிடம் மனு அளிக்க காவல்துறையில் அனுமதி கோரப்பட்டிருந்தது. பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால், ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. இதனால் ஏராளமான போலீஸார் மாவட்ட ஆட்சியரகம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர் ந்து, முக்கிய பிரமுகர்கள் மட்டும் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியை, நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.