Enable Javscript for better performance
திருடனை பிடித்துக் கொடுத்தவருக்கு கூர்வாள் பரிசு!: ஆவணமாக்கப்பட்ட 150 ஆண்டுகால வரலாறு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை

    திருடனை பிடித்துக் கொடுத்தவருக்கு கூர்வாள் பரிசு!: ஆவணமாக்கப்பட்ட 150 ஆண்டுகால வரலாறு

    By DIN  |   Published On : 30th July 2019 09:44 AM  |   Last Updated : 30th July 2019 09:44 AM  |  அ+அ அ-  |  

    திருடனைப் பிடித்துக் கொடுத்த விவசாயிக்கு, கந்தர்வகோட்டை ஜமீன் சார்பில் கூர்வாள் பரிசளிக்கப்பட்ட, 150 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வை, அரசுப் பள்ளி மாணவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
    சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், கந்தர்வகோட்டை ஜமீன் நிர்வாகத்திற்கு உள்பட்ட காட்டுநாவல் கிராமத்தில் இரவு நேரத்தில் கால்நடைகள் தொடர்ச்சியாக களவு போயுள்ளன. 
    அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நல்லபெருமாள், திருடனைப் பிடித்து கொடுத்து ஜமீனிடம் கூர்வாளை பரிசாகப் பெற்றுள்ளார்.
    ஆட்சிமுறை மாற்றங்கள் மற்றும் கந்தர்வகோட்டை ஜமீன் அரண்மனை சிதிலமடைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் வரலாற்றில்  இருந்து மறைந்து போன இந்த சம்பவத்தை, கந்தர்வகோட்டை அரசுப் பள்ளி மாணவர்களான சு.சக்திமகேஸ்வரன், ர.ஜனார்த்தனன் ஆகியோர் ஆவணப்படுத்தியுள்ளனர். 
    இதுகுறித்து அப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது: 
    எமது பள்ளியில் மாணவர்களுக்கு நாட்டின் பழமையான பண்பாட்டு சின்னங்களான கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவடிகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்களை பாதுகாப்பது குறித்து கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதுபோன்ற பயிற்சிகளில் பங்குபெற்ற தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள், பழங்கால வீட்டு உபயோகப் பொருள்கள், ஓலைச்சுவடிகள், பழமையான நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி வருகின்றனர்.  இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டுகள் ஆய்வில் உள்ளன.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் சக்திமகேஸ்வரன், ஜனார்த்தனன் ஆகியோர், சக்திமகேஸ்வரன் வீட்டில் கூர்வாள் ஒன்று இருப்பதாகவும் அதனை ஆவணப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர். 
    இதனைத்தொடர்ந்து உரிய தகவல்களை திரட்டிவர அறிவுறுத்தப்பட்டது. 
    இந்த கூர்வாள் ஜமீன்தாரால் பரிசளிக்கப்பட்டதன் பின்னணி குறித்த வாய்மொழித் தகவல்களை மாணவர்கள் திரட்டியதில் பல ருசிகரமான தகவல்கள் வெளிப்பட்டது. 
    கந்தர்வகோட்டை ஜமீன் எல்லைக்கு உள்பட்ட  கிராம மக்கள், பல ஆண்டுகளாக திருடர்களின் அட்டூழியத்தால் தங்களது பொன் பொருள்களையும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் இழந்து வந்துள்ளனர். மேலும், திருடர்கள் பயத்தால் மக்கள் இரவில் தூக்கமின்றி இருந்துள்ளனர். 
    இதனைத்தொடர்ந்து, திருடர்களை பிடித்துக் கொடுப்பவருக்கு  உரிய சன்மானம் வழங்கப்படும் என்று கந்தர்வகோட்டை ஜமீன் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.  ஆனால், இந்த அறிவிப்பு குறித்து நல்லபெருமாள் அறிந்திருக்கவில்லை என்றாலும், ஊர்மக்கள் நலனை காக்க வேண்டும் என்பதற்காக, பயங்கர ஆயுதங்களுடன் வந்த திருட்டுக்கும்பலை, தன் கையில் வைத்திருந்த சிறு சிலம்பக்கம்பினை வைத்து விரட்டியடித்ததோடு, திருட்டுக் கும்பலின் தலைவனை மடக்கிப்பிடித்து கை, கால்களை கட்டிப்போட்டார்.
    இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட இரைச்சலால் விழித்துக்கொண்ட கிராம மக்கள் அங்கே கூடினர். மேலும் தீப்பந்தங்களுடன் சென்று அன்றிரவே திருடனை கந்தர்வகோட்டை அரண்மனையில் ஜமீனிடம் ஒப்படைத்தனர். 
    நீண்ட நாள்களாக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த திருட்டுக்கும்பலை தனி ஆளாக ஒழித்துக்கட்டிய, காட்டுநாவல் கிராம விவசாயி நல்லபெருமாளுக்கு, பண்டாரத்தார் 
    வம்சாவழி ஜமீன்தாரர் மாலை சூடி பாராட்டினர். 
    மேலும், விவசாயிக்கு நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் வீரத்தின் அடையாளமாக கூர்வாள் ஒன்றையும் பொதுமக்கள் முன்னிலையில் பரிசளித்து ஜமீன் நிர்வாகத்தினர் கெளரவப்படுத்தியுள்ளனர் என்றார் மணிகண்டன்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp