விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்மா

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்மா விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடித் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு தலைமை வகித்த வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.ரா. லதா பேசியது:
மண்ணில் ஏராளமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. மண் ஆய்வு செய்து பரிந்துரையின் அடிப்படையில் உரமிட்டால் உரச்செலவு குறைவதோடு மண் நஞ்சாவது தடுக்கப்படும். உயிர் உரங்கள் மற்றும் உயிர் எதிர்கொல்லிகளான சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் காய்கறி மற்றும் உணவுப் பயிர்களில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம். 
மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை அந்தந்த சூழ்நிலைக்கேற்ப பின்பற்றுவதன் மூலம் பண்ணை வருமானத்தை அதிகரிக்கலாம் என்றார். பின்பு உழவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஞா. பிரபுகுமார் பயிற்சியளிக்கும்போது கூறியது:
தமிழ்நாட்டில் 3 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. தற்போது கிடைக்கக்கூடிய நீரில் 80 சதவிகிதம் நெற்பயிருக்கு பயன்படுத்தப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி செய்வதால் நீர் சேமிக்கலாம். மேலும் மானாவாரி பயிராக கம்பு, சோளம், மக்காச்சோளம், சிறுதானியப் பயிர்கள், பருத்தி, பயறு வகை, நிலக்கடலை மற்றும் எள் ஆகியவற்றைப் பயிரிட்டு லாபம் பெறலாம்.
மானாவாரியில் மண் ஈரம் காக்க கோடை உழவு, உளிக்கலப்பை, சரிவுக்கு குறுக்கே உழவு, சம மட்ட வரப்பு அமைத்தல், ஆழச்சால்  அகலப்பாத்தி, பகுதிப் பாத்தி சமதள வரப்பு, நீர் சேமிப்பு குழி, இணைக்கப்பட்ட பார்முறை, அரைவட்டப் பாத்தி, நிலப்போர்வை, கசிவு நீர் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைக்கலாம் என்றார்.  இப்பயிற்சியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்மா திட்ட விவசாயிகள் 22 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com