சுடச்சுட

  

  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை

  By DIN  |   Published on : 13th June 2019 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 27 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு சவால் மிகுந்த நுரையீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த இளங்கோவன் - கெளரி தம்பதியினரின் பெண் குழந்தை நேகாஸ்ரீ-க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த மே 29ஆம் தேதி மாற்றப்பட்டார். பரிசோதனையில், குழந்தையின் இடது நுரையீரலின் மேல்பகுதி செயல்படாமல் இருந்தது தெரிய வந்தது. பிறவியிலேயே ஏற்படும் இதுபோன்ற குறைபாட்டை "கன்ஜெனிட்டல் லோபார் எம்பைசீமா' என அழைப்பார்கள். 
  இதையடுத்து பிறந்து 27 நாட்களே ஆன அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஜூன் 1ஆம் தேதி நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை, மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்பிரமணியன், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் மேற்கொண்டனர்.
  இயங்காமல் இருந்த இடதுபக்க நுரையீரலின் மேல்பகுதி அகற்றப்பட்டது. மறுநாள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தபோது, வலதுபக்க நுரையீரல் விரிந்து வருவது தெரிந்தது. எக்ஸ்-ரே பரிசோதனையில் உள்ளே காற்று புகுந்திருப்பது கண்டறியப்பட்டது.
  இதையடுத்து காற்றை அகற்றும் வடிகுழாய் பொருத்தப்பட்டது. இரு நாட்களில் குழந்தை இயல்பாக தாய்ப்பால் உறிஞ்சிக் குடிக்கும் அளவுக்கு இயற்கையான சுவாசத்துக்கு மாறியது.
  இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது: 
  பச்சிளம் குழந்தைக்கு சவால் நிறைந்த இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டிருந்தால் ரூ. 2.50 லட்சம் வரை செலவாகும். ஆனால் தற்போது இந்தக் குழந்தைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai