அன்னவாசல், இலுப்பூர், கந்தர்வகோட்டை, பொன்னமராவதியில் மழை
By DIN | Published On : 14th June 2019 09:23 AM | Last Updated : 14th June 2019 09:23 AM | அ+அ அ- |

அன்னவாசல்-இலுப்பூர் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்தது.
தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இலுப்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து இடியுடன் மழை பெய்தது. இந்த மழை 30-நிமிடத்திற்கு மேலாக நீடித்தது. மழையால் சாலையில் ஆங்காங்கே நீர் தேங்கியது.
பொன்னமராவதியில்..: பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் வியாழக்கிழமை பெய்த மழையால் கோடை வெப்பம் ஓரளவு தணிந்தது. கோடை வெயில் காரணமாக பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உள்பட்ட அனைத்து கண்மாய், குளங்களிலும் நீர் வறண்டு , ஆடு மாடுகளுக்கு கூட குடிக்க நீரின்றி காணப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு காற்றுடன் தொடங்கிய மழை சுமார் 45 நிமிடம் பெய்தது. இதனால் கோடை வெப்பம் ஓரளவு தணிந்தது. விவசாயத்திற்கு போதிய மழை இல்லை.
கந்தர்வகோட்டையில்...: கந்தர்வகோட்டை பகுதியில் வியாழக்கிழமை காற்றுடன் பெய்த மழையில் பல நூறு ஏக்கர் வாழை மரங்கள் தாருடன் முறிந்து விழுந்தன. இதனால், விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
கந்தர்வகோட்டை ஒன்றிய பகுதிகளில் திடீரென காற்று , இடி , மின்னலுடன் சுமார் ஒரு மணிநேரமாக கனமழை பெய்தது. இதற்கிடையே சூறைக்காற்றும் வீசத் தொடங்கியது. இதில் விவசாயிகள் பல நூறு ஏக்கர்களில் பயிரிட்டிருந்த பூவன், ரஸ்தாளி , செவ்வாளை, காய்வாழை உள்ளிட்ட வாழை மரங்கள் தாருடன் முறிந்து விழுந்தன.
புதுநகர், பழையகந்தர்வகோட்டை, மெய்குடிப்பட்டி, துருசுப்பட்டி, சோழகம்பட்டி, வீரடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மிக அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் அடித்த கஜா புயலில் பெரும் சேதங்களை சந்தித்த பிறகு, விவசாயிகள் தற்போதுதான் மெல்ல, மெல்ல மீண்டுவந்தனர். இத்தகைய சூழலில், மீண்டும் ஓர் இழப்பை சந்தித்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...