441 பேருக்கு ரூ.3.91 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
By DIN | Published On : 18th June 2019 08:57 AM | Last Updated : 18th June 2019 08:57 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 441 பேருக்கு ரூ. 3.91 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழங்கினார்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலை வகித்தார்.
இதில், காமராஜபுரம் மக்கள் 157 பேருக்கு ரூ. 3.27 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும், 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 12 பேருக்கு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ. 11.95 லட்சம் மதிப்பில் விலையில்லா எம்பிராய்டரி இயந்திரங்களும், 25 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் ரூ.1.24 லட்சம் மதிப்பில் விலையில்லா தேய்ப்பு இயந்திரங்களும், 102 பேருக்கு மகளிர் திட்டத்தின் சார்பில் ரூ. 50.20 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், 15 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ. 11.17 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட வீல் சேர்களும், 120 பேருக்கு மாவட்ட வழங்கல் துறை சார்பில் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளும் என மொத்தம் 441 பேருக்கு ரூ. 3.91 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசும்போது, காமராஜபுரம் மக்களின் 70 ஆண்டு காலக் கோரிக்கையான வீட்டு மனை பட்டா, ஏற்கெனவே 386 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 1100 பேருக்கு விரைவில் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா. ஆறுமுகம், வருவாய்க் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விராலிமலை: இலுப்பூரில் வருவாய்த்துறை சார்பில் ரூ.22.50 லட்சம் மதிப்பில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திங்கள்கிழமை வழங்கினார்.
இலுப்பூர் கோட்டத்திற்கு உள்பட்ட இலுப்பூர், விராலிமலை, பொன்னமராவதி ஆகிய வட்டங்களை சேர்ந்த 9 பயனாளிகளுக்கு ரூ.1.8 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, 12 பயனாளிகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணை, 72 பயனாளிகளுக்கு ரூ.19.97 லட்சம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 20 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 12 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை என மொத்தம் 125 பயனாளிகளுக்கு ரூ.22.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, வருவாய் கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் முருகப்பன்(இலுப்பூர்), ஜெ. சதீஷ்சரவணகுமார்(விராலிமலை), பாலகிருஷ்ணன் (பொன்னமராவதி) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.