அரசு இசைப் பள்ளியில் நாளை இசைப் போட்டிகள்
By DIN | Published On : 18th June 2019 08:53 AM | Last Updated : 18th June 2019 08:53 AM | அ+அ அ- |

உலக இசை தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் புதன்கிழமை (ஜூன் 19) இசைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
உலக இசை தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை திலகர் திடலிலுள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் புதன்கிழமை இசைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. காலை 10 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.
15 வயது முதல் 30 வயது வரையுள்ளவர்களுக்கு நான்கு பிரிவுகளில் இப்போட்டிகள் நடத்தப்படும். தமிழிசைப் போட்டி, கிராமியப் பாடல் போட்டி, முதன்மை கருவியிசைப் போட்டி (நாகசுரம், வீணை, வயலின், புல்லாங்குழல், மாண்டலின், கோட்டுவாத்யம், சாக்ஸபோன், கிளாரிநெட் போன்றவை), தாள கருவியிசைப் போட்டி (மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்றவை) ஆகிய போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டிகளில் தமிழில் அமைந்த பாடல்களை மட்டுமே பாடவோ, இசைக்கவோ வேண்டும். போட்டியாளர்கள் தங்களுக்குத் தேவையான இசைக் கருவிகளை அவரவரே கொண்டு வர வேண்டும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசு ஆயிரமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இசைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மா. சிவஞானவதியை செல்லிடப்பேசி எண் 94861 52007இல் தொடர்பு கொள்ளலாம்.