மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி பூஜை
By DIN | Published On : 18th June 2019 08:56 AM | Last Updated : 18th June 2019 08:56 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி சிறப்பு யாக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
மிக பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் மூலமூர்த்தியாக மீனாட்சி சுந்தரரேஸ்வரர் அருள் பாலிக்கிறார். அனைத்து சிவாலயங்களிலும் துர்காதேவி சிவபெருமானுக்கு இடதுபுறம் இருக்கிறார். ஆனால், இவ்வாலயத்தில் மட்டும் துர்காதேவி சிவபெருமானுக்கு வலதுபுறத்தில் 18 திருக்கரங்களில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, நவக்கிரகங்களில் ராகுபகவானை பார்த்த நிலையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இதன்படி குழந்தை பாக்கியம் அமையவும், திருமணத்தடை, சர்ப்பதோஷம், மாங்கலய தோஷம் நீங்கவும் இந்தக் கோயிலில் பக்தர்கள் பரிகாரம் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
துர்கா தேவி பரிகார தலமாக போற்றப்படும் இந்தக் கோயிலில் பௌர்ணமி யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாகவாஜனம், கும்பபூஜை, லலிதா சகஸ்கரநாம பாராயணம் மற்றும் சிறப்பு யாகவேள்விகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு துர்கா ஹோமம் நடைபெற்றது.
முற்பகல் 11.45 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் ராஜீவ் குருக்கள், முத்துக்குமார் குருக்கள் பூஜையை வழிநடத்தினர். பூஜையில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.